2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

’பொது போக்குவரத்தை தவிருங்கள்’

Niroshini   / 2021 ஜனவரி 07 , பி.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

வடக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகள், திங்கட்கிழமை (11) ஆரம்பிக்கவுள்ள நிலையில், பாடசாலைக்குச் செல்லும் மாணவர்கள் பொது போக்குவரத்தில் செல்வதைத் தவிர்க்குமாறு தெரிவித்த வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவன், தமது பெற்றோரின் சொந்த வாகனங்களில் பாடசாலைக்குச் செல்வதே சிறந்தது எனவும் கூறினார்.

யாழ். மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பு விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், பாடசாலை மாணவர்களின் சுகாதார நலத் திட்டங்களை மேம்படுத்துவதற்காக, சுகாதார அமைச்சால் நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்த நிதி மூலம் மாணவர்களின் சுகாதார நடைமுறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன எனவும் கூறினார்.

அத்துடன், வகுப்பறைகளில் இரண்டு கட்டங்களாக மாணவர்கள் உள்வாங்கப்படவுள்ளனர் எனத் தெரிவித்த அவர், அதாவது ஒரு தொகுதியினர் கிழமையில் மூன்று நாள்களும், மறு தொகுதியினர் அடுத்த மூன்று நாள்களும் பாடசாலைக்கு அழைக்கப்படவுள்ளனர் எனவும் கூறினார்.

அத்துடன், பாடசாலைகளை சுத்தம் செய்யும் நடவடிக்கைகளுக்கு இராணுவத்தினரின் ஒத்துழைப்பை  எதிர்பார்ப்பதாகவும், இளங்கோவன் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X