2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

மாணவி கொலை: சந்தேக நபரின் விளக்கமறியல் நீடிப்பு

Gavitha   / 2017 பெப்ரவரி 02 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் 10 ஆம் சந்தேகநபரை, மேலும் 2 மாத காலத்துக்கு விளக்கமறியலில் தடுத்து வைக்க, ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றத்துக்கு, யாழ்.மேல் நீதிமன்றம்,  வியாழக்கிழமை அனுமதி அளித்துள்ளது.

கடந்த ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி, படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவியின் படுகொலை தொடர்பில், 12 சந்தேக நபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களின் விளக்கமறியல் காலம் ஒரு வருடத்தை தாண்டியுள்ள நிலையில், ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றம், யாழ். மேல் நீதிமன்றத்தின் அனுமதியுடன் அவர்களின் விளக்கமறியல் காலத்தை நீடித்து வருகின்றது.

இந்நிலையில், 10ஆம் சந்தேக நபரின் விளக்கமறியல் காலம் முடிவடையும் நிலையில், அவருடைய விளக்கமறியல் காலத்தை நீடிக்குமாறு கோரி, 10 ஆம் சந்தேகநபர், யாழ். மேல் நீதிமன்றில் நேற்று முற்படுத்தப்பட்டார்.

இதன்போது குறித்த சந்தேக நபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, “புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 10 ஆம் சந்தேகநபர் நிரபராதி எனவும், மாணவி உயிரிழந்து 7 மாதங்களின் பின், அனுதாபம் தெரிவிக்கவே மாணவியின் வீட்டுக்குச் சென்றார் எனவும் தெரிவித்து, அவருக்கு பிணை வழங்குமாறு கோரினார்.

அத்துடன், “ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணையின்போது, கொலைக்கும் இவருக்கும் நேரடி தொடர்புகள் இல்லை என, சி.ஐ.டியினர் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளனர். குறித்த அறிக்கையின் பிரதியை எம்மால் பெற்றுக்கொள்ள முடியவில்லை” என அவர் மேலும் கூறியுள்ளார்.

எனினும், அதனை ஏற்றுக்கொள்ளாத நீதிபதி மா.இளஞ்செழியன், 10 ஆம் சந்தேகநபரின் விளக்கமறியலை நீடித்து உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X