Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஓகஸ்ட் 13 , பி.ப. 06:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலிலே மக்கள் தமது தீர்ப்பை வழங்கியிருக்கிறார்களெனத் தெரிவித்த தமிழ் மக்கள் பேரவை, அந்த மக்கள் தீர்ப்பு மதிக்கப்பட வேண்டிய ஒன்றாகுமெனவும், இந்தத் தேர்தலில் எந்தவோர் அணியினருக்கும் அவர்கள் எதிர்பார்த்த வெற்றிகிடைக்கவில்லையெனவும் கூறியது.
இது தொடர்பில் தமிழ் மக்கள் பேரவை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்தத் தேர்தல் அரசியல் கட்சிகளுக்கிடையேயும் கட்சிக்குள்ளேயும் பல முரண்பாடுகளும் ஜனநாயக விரோதப்போக்குகளும் தலைதூக்கியிருப்பது வேதனையானதெனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
“இதனால் மக்கள் குழப்பமும் கவலையும் அடைந்திருக்கிறார்கள். ஒவ்வொரு தரப்பும் மறுதரப்பை விமர்சனம் செய்வதிலும் பார்க்க சுயவிமர்சனம் செய்து தத்தமது நடவடிக்கைகளை நெறிப்படுத்திக் கொள்வது ஆரோக்கியமானதாக அமையும்.
“தீய நோக்கங்களுக்காக தவறான கருத்துகள் பதிவிடப்படுவதும் அவற்றின் உண்மைத்தன்மை அறியாது, அவை பகிரப்படுவதும் குழப்பநிலைகள் மேலும் அதிகரிக்க வழிவகுக்கும். கருத்துகள் பதிவிடப்படும்பொழுது பிறரின் மனம் நோகாது சரியான, நாகரிகமான வார்த்தைப் பிரயோகங்களுடன் உண்மையை எழுதிக்கொள்வது தமிழரின் மரபுக்கு வலுச்சேர்க்கும்.
“ஒருவரிலே பழி தீர்ப்பதற்காக ஊடகங்களைப் பயன்படுத்துவது அறம் ஆகாது. இவை சமூகங்களுக்கிடையே பிரிவினையை வளர்த்துக்கொள்வதற்கே வழிவகுக்கும். சமூக ஒற்றுமை என்பது தேசியத்தின் அடிநாதம்.
“ஒற்றுமையில்லாது வெறுப்புகள் நீரூற்றி வளர்க்கப்படின், தேசியம் மடிந்து போகும் ஒரு துர்ப்பாக்கிய நிலை தோன்றலாம். ஒரு சமூகம் அங்கு நடைபெறும் நல்ல விடயங்களைக் கண்டறிந்து ஊக்கப்படுத்துமாயின், அது வளர்ச்சி பெறுவதுடன் ஒற்றுமையும் மேலோங்கும். எதையும் சந்தேகக் கண்ணுடன் நோக்கி தீய சம்பவங்களை மட்டுமே வடித்தெடுத்து அநாகரிகமாக விமர்சிப்பது பிரிவுகளை ஆழமாக்கும்.
“காலத்தின் தேவைகருதி தமிழ் மக்கள் பேரவையானது தமக்கென ஒரு புதிய யாப்பை அறிமுகம் செய்யவிருக்கின்றது. இது தேர்தல் அரசியல் கடந்து தமிழ் மக்களின் ஒற்றுமைக்கும் அவர்களின் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் வழிசமைக்கும்.
“இந்த முயற்சியிலே பொது அமைப்புகளினதும், பொதுமக்களினதும் பெரும் பங்களிப்பு எதிர்பார்க்கப்படுகின்றது. பொதுமக்கள், அரசியல்வாதிகளை வழிநடத்தும் ஒரு பொறிமுறை நோக்கி நகர முயற்சி எடுக்க தமிழ் மக்களை அணிதிரள அழைக்கின்றோம்” எனவும், அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 hours ago
26 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
26 Aug 2025