2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

மத்திய அரசாங்கத்துக்கே பொறுப்பு; நழுவுகிறார் சி.வி

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 10 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

"மீள்குடியேறும் மக்களுக்கு அடிப்படை வசதிகளை உடனடியாக பெற்று கொடுக்க வேண்டியது, அரசாங்கத்தின் கடப்பாடு. அதில் நாம் தான்தோன்றித்தனமாகத் தலையீடு செய்ய இயலாது. அவ்வாறு மத்திய அரசாங்கம் தனது கடப்பாட்டைச் செய்யவில்லை என்பதை, மக்கள் எமக்கு எழுத்துமூலமாகத் தெரியப்படுத்தினால், அது தொடர்பாக மத்திய அரசாங்கத்துடன் பேசி மக்களுக்குரிய உதவிகளை பெற்று கொடுப்பதற்கு, எங்களால் ஆவன செய்ய இயலும்" என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

பிலவுக்குடியிருப்பு மக்கள், தமது சொந்த நிலத்தில் தம்மை மீள்குடியேற்ற கோரி ஒரு மாதம் தொடர்ச்சியான கவனயீர்ப்புப் போராட்டத்தை நடத்தியிருந்தனர். இதன் விளைவாக மார்ச் மாதம் 01ஆம் திகதி, விமானப்படையின் கட்டுப்பாட்டிலிருந்த மக்களுடைய நிலங்கள் மக்களிடம் வழங்கப்பட்ட நிலையில், 84 குடும்பங்கள் தமது சொந்த நிலத்தில் மீள்குடியேறினர்.

இந்நிலையில் மீள்குடியேறிய மக்களுக்கான அடிப்படை வசதிகள் எவையும் வழங்கப்படாத நிலை தொடர்கிறது. கடந்த 1 மாதங்களில் மத்திய, மாகாண அரசாங்கங்கள் சார்ந்த எந்தவோர் அரசியல்வாதியும், தமக்கான உதவிகளை வழங்குவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதேவேளை மேற்படி மக்களின் குற்றச்சாட்டுத் தொடர்பாக, வடமாகாண முதலமைச்சர் சி.விவிக்னேஸ்வரனிடம் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், "அதேவேளை எங்களுடைய மக்கள்தானே நாங்கள் செய்யலாம் என நாங்கள் செய்ய முயன்றால், மத்திய அரசாங்கம் செய்யட்டும் என பார்த்துக் கொண்டிருக்கும். எனவே மத்திய அரசாங்கத்தின் கடப்பாட்டை, மத்திய அரசாங்கத்தைக் கொண்டே நிறைவேற்ற வேண்டும்" என முதலமைச்சர் கூறியுள்ளார்.

இந்நிலையில் மக்கள், தங்கள் சொந்தப் பணத்தில் வாங்கிய பொலித்தீன் தரப்பாள்களில் கூடாரங்களை போட்டு கொண்டு, அதிலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றமை இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .