2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

‘மயிலிட்டித் துறைமுகம் முழுமையாக விடுவிக்கப்படவில்லை’

Editorial   / 2018 பெப்ரவரி 07 , பி.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

“வலிகாமம் வடக்கில் இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து மயிலிட்டித் துறைமுகம் முழுமையாக விடுவிக்கப்படவில்லை. ஆனால் முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளதாக பலரும் பொய்ப் பிரசாரத்தை முன்னெடுத்து வருவதாக” அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே, மயிலிட்டி துறைமுகத்தையும் அதனை அண்மித்த பிரதேச மக்களின் காணிகளையும் முழுமையாக விடுவிக்க வேண்டுமென மயிலிட்டி மீள்குடியேற்றச் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 1990 ஆம் ஆண்டு முதல் வலிகாமம் வடக்கின் பல பகுதிகள் உயர்பாதுகாப்பு வலயமாக உள்ளது. எனினும் தற்போது அவற்றில் சில பகுதிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு மக்கள் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அப்பகுதி மக்கள் கருத்து தெரிவிக்கையில்,

“மயிலிட்டி துறைமுகமும் அண்மையில் விடுவிக்கப்பட்டு அப்பகுதி மக்களும் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளதாக பலரும் பொய்ப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உண்மையில் மயிலிட்டித் துறைமுகப் பகுதி விடுவிக்கப்பட்ட போதும், துறைமுகம் முழுமையாக விடுவிக்கப்படாது படையினர் பாதுகாப்பு வேலிகளை அமைத்து அரைவாசிப் பகுதியை தமது கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கின்றனர். அதே போன்றே மயிலிட்டிப் பிரதேசம் முழுமையாக விடுவிக்கப்பட்டு மக்கள் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும் இன்னும் பல பகுதிகள் விடுவிக்கப்படாது படையினர் வசமே தற்போதும் உள்ளது.

ஆகவே மயிலிட்டித் துறைமுகத்தையும் மயிலிட்டிப் பிரதேசத்தையும் முழுமையாக விடுவித்து அப்பகுதி மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டு சுதந்திரமாக தொழில் செய்வதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .