2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

மீண்டும் நீல உடை அணிந்த யாழ். மாநகர சபை ஊழியர்கள்

Princiya Dixci   / 2022 ஓகஸ்ட் 23 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

நல்லூர் மகோற்சவ திருவிழாக்களின் போது,  நீல உடை அணிந்த மாநகர சபை ஊழியர்கள் மீண்டும் பணியில் ஈடுபடுவார்கள் எனவும்,  அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும், யாழ்.மாநகர மேயர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்தார். 

நல்லூர் மஹோற்சவம் தொடர்பான ஊடக சந்திப்பொன்று, நேற்று (22) நடைபெற்றது. அதன்போதே அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

“நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஆலய பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.

ஈஸ்டர் குண்டு வெடிப்பு மற்றும் கொரோனா தொற்று காரணமாக கடந்த மூன்று வருடங்களாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெற்ற நல்லூர் மகோற்சவம் தற்போது மிகச் சிறப்பாக இடம்பெற்று வருகிறது. 

எதிர்வரும் வியாழக்கிழமை (25) தேர்த் திருவிழாவும் மறுநாள் வெள்ளிக்கிழமை (26) தீர்த்தத் திருவிழாவும் நடைபெறவுள்ளன. 

எதிர்வரும் நாட்களில் விசேட திருவிழாக்கள் இடம்பெறவுள்ளமையால், அதிகளவானோர் ஆலயத்துக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால்,  நீல உடை அணிந்த யாழ். மாநகர சபையின் விசேட அணியொன்று, வீதி ஒழுங்குகளை பேணி போக்குவரத்து நெரிசல்களை தவிர்க்கும் விதமான செயற்பாடுகளை முன்னெடுப்பார்கள், அவர்களுக்கு  பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மேயர் கோரியுள்ளார். 

யாழ்.மாநகர சபை எல்லைக்குள் குப்பைகளை கொட்டுதல், துப்புதல் போன்றவற்றை தடுத்து தூய்மையான மாநகரத்தை பேணும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட மாநகர சபையின் விசேட அணியின் ஆடைகள் விடுதலைப் புலிகளின் காவல்துறையினரின் ஆடையை ஒத்த ஆடை என பயங்கரவாத தடுப்பு பிரிவினர் யாழ்.மாநகர சபை மேயரைக் கைது செய்து, வழக்கு தொடர்ந்தனர். 

குறித்த வழக்கில் இருந்து மேயரை விடுவித்த நீதிமன்று, வழக்கையும் தள்ளுபடி செய்தது.

இந்நிலையிலையே நீல ஆடை அணிந்த விசேட அணியினர் மீண்டும் தமது கடமைகளை தொடரவுள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X