2025 மே 19, திங்கட்கிழமை

‘மீளவும் மஹிந்த வருவது கஜேந்திரகுமாருக்கும் சி.விக்கும் விருப்பம்’

Editorial   / 2018 நவம்பர் 16 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மீளவும் பதவிக்கு வர வேண்டுமென, முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் விரும்புவதாகத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான கேசவன் சயந்தன், அதற்காகவே இன்றைய அரசியல் நெருக்கடியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடுநிலை வகிக்க வேண்டுமென்று அவர்கள் கோருவதாகவும் குறிப்பிட்டார். 

சமகாலத்தில் ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடியில், கூட்டமைப்பின் செயற்பாடுகள் தொடர்பில், நேற்று (15) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இது குறித்து தொடர்ந்து கருத்துரைத்த அவர், தங்களைப் பொறுத்தவரையில், ஜனாதிபதியின் செயற்பாடு, அப்பட்டமான அரசமைப்புச் சட்ட மீறலாகுமெனவும் அந்தச் செயலுக்காகத்தான் தாங்கள் எதிர்வினை ஆற்றுவதாகவும் தெரிவித்தார். 

ஜனாதிபதியின் இந்தச் செயலுக்காக தாங்கள் ஆற்றுகின்ற எதிர்வினை, ஏதாவதொரு விளைவில் முடிவடையலாமெனத் தெரிவித்த அவர், அந்த விளைவு சில சமயங்களில் மஹிந்த ராஜபக்‌ஷவையோ அல்லது ரணில் விக்கிரமசிங்கவையோ பிரதமர் பதவியில் அமர்த்துவதில் முடிவடையலாமெனவும் குறிப்பிட்டார். 

இதேவேளை, மஹிந்த ராஜபக்‌ஷ பதவியில் அமர வேண்டுமென்று முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் நினைக்கின்றார்களெனவும் இதற்காக இவ்விருவரும் தங்களை விமர்சித்து வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். 

அத்துடன், கடந்த காலங்களில், கூட்டமைப்பின் மீது விமர்சனங்களை முன்வைப்பதில் பிரதானமாக முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் இருந்து வருவதாகத் தெரிவித்ததுடன், அவர்கள் கூட்டமைப்பைக் குற்றஞ்சாட்டி, தங்களைப் புனிதர்களாகக் காட்டிக்கொள்வதற்குப் பிரசாரம் செய்ய முனைவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X