2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

‘முள்ளிவாய்க்காலில் நினைவு தூபி அமைக்க ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளேன்’

Editorial   / 2018 மே 17 , பி.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த், டி.விஜிதா

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூரும் வகையில் நினைவு தூபி அமைக்க வேண்டியதன் அவசியம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேரில் சந்தித்து  வலியுறுத்தியுள்ளதாக சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர்  விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இன்று (17) ஊடகங்களுக்கு அவர் அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அதில் மேலும்,

“இறுதி யுத்தத்தின் போது வன்னியில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். உயிரிழந்த இந்த மக்கள் நினைவுகூர முடியாத நிலைமை பல வருடங்களாக நிலவி வந்தது.  ஆனாலும்  எமது நல்லாட்சி  அரசாங்கம் பதவியேற்றதையடுத்து  2015 ஆம் ஆண்டு மே மாதம் முதல்   முள்ளிவாய்க்காலில் எமது உறவுகளை நினைவேந்தல் செய்யக்கூடிய நிலைமை  ஏற்படுத்தப்பட்டது.

கடந்த 3 ஆண்டுகளாக  முள்ளிவாய்க்காலில்  உணர்வுபூர்வமாக இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறுகின்றது.

இதேபோன்றே கடந்த வருடம் மாவீரர் தின நிகழ்வுகளும்   வடக்கு, கிழக்கில் அனுஷ்டிக்கப்பட்டது.

இவ்வாறு எமது அரசாங்கமானது நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு  அனுமதியினை வழங்கியுள்ளது. நினைவேந்தல் நிகழ்வினை  நடத்துவதில் தவறேதும் இல்லை என்று அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரட்ன பகிரங்கமாகவே அறிவித்திருக்கின்றார்.

யுத்தத்தில் பொதுமக்களும்  கொல்லப்பட்டுள்ளனர் என்பதை அரசாங்கமே   ஏற்றுக்கொண்டிருக்கின்றது.  இந்த நிலையில்  முள்ளிவாய்க்கால்   நினைவேந்தல் நிகழ்வானது   அரசியல், சுயநல பேதங்கள் இன்றி பொதுவான எண்ணத்துடன் நடத்தப்படவேண்டியது இன்றியமையாததாகும்.

உயிரிழந்த உறவுகளை   நினைவுகூரும் நாளில்  அரசியல் பேதங்கள் இன்றி  சகல தரப்பினரும்  ஒன்றிணைந்து  செயற்படுதல் அவசியமானதாகும்.  உயிரிழந்த உறவுகளை நினைவுகூருவதற்கு  முள்ளிவாய்க்காலில் நினைவுதூபி அமைக்கப்படவேண்டியதன் அவசியத்தை கடந்த மூன்று வருடங்களாக  வலியுறுத்தி வருகின்றேன்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கடந்த புதன்கிழமை  சந்தித்து  நினைவுதூபி அமைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதுடன் அதற்கான கடிதத்தினையும் கையளித்துள்ளேன்.

அதேபோன்றே பிரதமர்  ரணில் விக்கிரமசிங்கவிடமும்   இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இரணைதீவில் மக்களை குடியேற்றவேண்டியதன் அவசியத்தை  நான்  தொடர்ந்தும் வலியுறுத்தி வந்தேன்.  அதற்கான சந்தர்ப்பம் தற்போது எட்டியுள்ளது.

அதேபோன்றே நினைவு தூபி அமைக்கும் விடயத்திலும்  தொடர்ச்சியாக அக்கறை  செலுத்துவேன்.

இந் நாளில்  சகலரும் ஒன்றிணைந்து  உயிரிழந்த உறவுகளை  நினைவுகூருவோம்.  அரசியல் பேதங்களை மறந்து நாம் அனைவரும் இந்த விடயத்தில் ஒன்றிணைந்து  செயற்படவேண்டியது இன்றியமையாதது” என குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .