Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Editorial / 2018 ஏப்ரல் 30 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
முள்ளிவாய்க்கால் மே 18 நினைவேந்தல் நிகழ்வை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் பகுதியில் இன்று (30) சிரமதானப்பணிகள் இடம்பெற்றுள்ளது.
இன்று முற்பகல் முள்ளிவாய்க்கால் பகுதிக்கு சென்ற யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இந்த சிரமதானப்பணியை மேற்கொண்டுள்ளனர்.
2009 ஆண்டு இறுதி யுத்தத்தின் போது உயிரிழந்த பொதுமக்களுக்காக முள்ளிவாய்க்கால் பகுதியில் நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்படுகின்றது.
இந்நிலையில் எதிர்வரும் மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை உணர்வுபூர்வமாக அனுஸ்டிப்பதுக்காக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றினைந்து இந்த சிரமதானப்பணியை மேற்கொண்டுள்ளனர்.
அத்துடன் பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தால் ஊடக அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில்,
“மே-18 என்பது தனியே முள்ளிவாய்க்கால் மண்ணில் நிகழ்ந்த பெருந்துயருக்குரிய நினைவுநாள் என்பதையும் தாண்டி, ஈழத்தமிழினம் எதிர்கொண்ட அனைத்து இனவழிப்பையும் ஒருசேர நினைவுகொள்ளும் ஒருநாளாக - தமிழர் இனவழிப்பு நினைவுநாளாக - அமையப்பெற்றிருக்கின்றது.
ஈழத்தமிழினம் தனக்கிழைக்கப்பட்ட அநீதிகளையும் அவற்றின் விளைவான துயர்களையும் நினைவுகொண்டு, உலகிடம் நீதிவேண்டி வீறுகொண்டு போராட திடசங்கற்பம் பூணும் ஒருநாளாக இந்நாள் வரலாற்று முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. எனவே இந்த மே-18 நாளை எமது தமிழினம் எவ்வாறு கையாள்கிறது என்பது உலக அரங்கில் உன்னிப்பாய்க் கவனிக்கப்படுவதோடு தமிழர்களாகிய எமக்கும் எமது பலத்திரட்சியை வெளிப்படுத்தும் ஒரு களமாக அமைகின்றது.
கடந்தகாலத்தைப் போலன்றி இவ்வாண்டு முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தப்படும் நினைவுநிகழ்வானது தமிழரின் உணர்வையும், ஒற்றுமையையும், நீதிக்கான ஒருமித்த வேட்கையையும் தெளிவாக வெளிப்படுத்தும் விதமாக அமைய வேண்டுமென்ற அவாவோடு பல்கலைக்கழக மாணவர் சமூகமாகிய நாம் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றோம்.
ஒற்றுமை என்றபேரில் எமது மக்களின் அரசியல் அபிலாசைகளை நீர்த்துப் போகச்செய்யும் நோக்கமோ, தமிழர்க்கான நீதிவேண்டிய பயணத்தில் முட்டுக்கட்டைகளாக இருப்போரை அரவணைக்கும் நோக்கமோ, தனிப்பட்ட கட்சிகளுக்கோ அரசியற் பிரமுகர்களுக்கோ மேடையமைத்துக் கொடுத்து சிலருக்கு அரசியல் இலாபம் தேடிக்கொடுக்கும் நோக்கமோ எமது ஒன்றுபட்ட நிகழ்வுக்கான அழைப்பின் பின்னால் இல்லை. மாறாக, வலிசுமந்த மக்களின் உணர்வுகளை மதித்து, அங்கிங்கென்று பிரிந்து நடக்கும் நிகழ்வுகளைத் தவிர்த்து, ஓர் உணர்வுபூர்வமான நிகழ்வையும், ஒருங்கிணைந்த மக்கள் திரட்சியையும் வெளிக்கொணர்தலே எமது நோக்கமாகும்.
உலகம் முழுவதும் நடைபெறும் மே-18 நிகழ்வுகளுக்கெல்லாம் சிகரமாய்த்திகழும் முள்ளிவாய்க்கால் மண்ணில் நடக்கும் நினைவுநிகழ்வை சிறப்புற நடாத்த மக்களினதும், இனவிடிவிற்காய் உழைக்கும் சகலரினதும் ஒத்துழைப்பையும் தமிழ்மக்களின் உரிமைக்குரலாக ஒலித்துக்கொண்டிருக்கும் யாழ். பல்கலைக்கழக சமூகம் வேண்டி நிற்கின்றது.
உங்களின் பசியை தீர்த்து வைக்காமல் எங்களின் உணவை தொடமாட்டோம் என்று மக்களை பார்த்து கூறும் உளத்தூய்மையும் உங்களின் வாழ்வில் ஒளிவிளக்கேற்ற உயிரையும் பிழிந்து கொடுப்போம் என்று மக்களை பார்த்து கூறும் நெஞ்சுரமும் உங்களிடம் இருப்பதாக எவரெல்லாம் மானசீகமாக உணர்கிறீர்களோ அவரெல்லாம் மறுக்கப்படும் நீதிக்காகவும் ஏமாற்றப்படும் தமிழ் சமூகத்திற்காகவும் முள்ளி வாய்க்கால் பேரவலத்தினை நினைவு கூர அணி திரளுங்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளது
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago