2025 ஓகஸ்ட் 30, சனிக்கிழமை

‘மொழியாலேயே அழிவு நேர்ந்தது’

Editorial   / 2017 டிசெம்பர் 10 , பி.ப. 08:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரச ரட்ணம் 

சிங்கள மொழியைக் கற்றுக்கொள்ளாதன் காரணத்தாலேயே, தமிழ் இனம் கடந்த காலங்களில் பாரிய அழிவைச் சந்திக்க நேரிட்டதாக, வட மாகாண சபை உறுப்பினர் அகிலதாஸ் சிவக்கொழுந்து தெரிவித்தார். 

நெல்லியடி மகளிர் மத்திய கல்லூரியில் நேற்று  (09) நடைபெற்ற சிங்கள மொழித் தின நிகழ்வில், பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.  

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 

“கடந்த காலங்களில் இராணுவத்தினரின் சுற்றிவளைப்புகளின்போது, தமிழ் இளைஞர்கள் சிங்கள மொழி தெரியாததன் காரணமாக தவறுதலாக கைது செய்யப்பட்ட சம்பவங்களும் வடமராட்சி நடைபெற்றிருந்தது. அதனை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், அத்தகைய நெருக்கடியான காலகட்டங்களில், நெல்லியடி வர்த்தக சங்க தலைவனாக இருந்து இராணுவத்தினரால் அல்லது பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பல இளைஞர்களை நான் சிங்கள மொழி பேசி மீட்டு எடுத்திருக்கின்றேன்.  

“சிங்கள மொழியைக் கற்பதற்கு நாம் மாணவர்களாக இருந்த காலத்தில் தடை இருந்தது. முன்னைய அரசியல் தலைமைகளும் அதற்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தனர். சிங்கள மொழி பேசும் தமிழர்கள் அனைவரும் துரோகிகளாகக் கணிக்கப்பட்டனர். அதனால் தமிழ் மக்கள் இரண்டாம் மொழியாக சிங்கள மொழியைக் கற்பதற்கு வாய்ப்புகள் குறைவடைந்தன. ஒருசில படித்த உயர் பதவி வகித்தோர் மட்டுமே அதனை கற்றுக்கொண்டு, தமது வாழ்வைத் திறம்பட நடாத்தினர். ஏனைய வசதிகுறைந்தவர்கள் சிங்கள மொழியில் நாட்டம் இல்லாது கடைசி வரை புறந்தள்ளப்பட்டனர்.  

“ஆனால் இன்று உயர் பதவிகளை வகிப்பதற்கும் அரச வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்வதற்கும் சிங்கள மொழி கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த காலத்தில் படித்த பலர் பதவி உயர்வு இல்லாது இருந்து வருகின்றனர் என்பதும் உண்மையே. இந்த ஆண்டிலிருந்து அரச பதவிகளை வகிக்கும் அனைவரும் சிங்கள மொழி கற்றுக்கொள்ள வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  

“சிங்கள மொழியைக் கற்பதனால் தமிழர்களின் அடையாளம் பறிபோய்விடும் என்பதை நான் முற்றாக மறுக்கின்றேன். நாம் ஆங்கிலத்தை கற்பதைப்போன்று சிங்கள மொழியையும் மொழி என்ற அடிப்படையில் நாம் கற்றுக் கொள்ள வேண்டும். இலங்கையில் எந்தப் பகுதிக்கு சென்றாலும் சிங்கள மொழியில் நாம் உரையாடி எமது தேவைகளை நிறைவு செய்ய வேண்டிய நிலை காணப்படுகின்றது” எனத் தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .