2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

’யாப்பின் பிரகாரம் பயணம் செய்தால் கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்கியிருப்போம்’

க. அகரன்   / 2018 ஏப்ரல் 22 , பி.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கிலும் கிழக்கிலும் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு, தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு ஆதரவு வழங்காமைக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளே காரணமெனக் குறிப்பிட்டுள்ள, ஈ.பி.ஆர்.எல்.எப்-இன் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்,

கொள்கை ரீதியாக, யாப்பின் பிரகாரம் பயணம் செய்யுமாக இருந்தால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வடக்கிலும் கிழக்கிலும் உள்ள அனைத்து உள்ளூராட்சி சபைகளிலும் ஆதரவு வழங்கியிருக்க முடியமெனவும் தெரிவித்தார்.

வவுனியா நகரசபையை, ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழர் விடுதலைக் கூட்டணி உள்ளிட்ட கட்சிகள் உள்ளடங்கிய தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்புக் கைப்பற்றியுள்ள நிலையில், அச்சபையின் தவிசாளராகத் தெரிவுசெய்யப்பட்ட இ. கெளதமனைக் கெளரவிக்கும் நிகழ்வு, வவுனியாவில் இன்று (22) நடைபெற்ற போது, அதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், மட்டக்களப்பு மாநகர சபைக்கும் இன்னும் மூன்று சபைகளுக்கும், தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் உறுப்பினர்களின் ஆதரவைக் கோரி, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கருணாகரன் ஆகிய இருவரும், தங்களிடம் உதவி கேட்டிருந்தனர் எனத் தெரிவித்தார்.

“ஒரு கொள்கை ரீதியாகவும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலமாகவும் ஒரு யாப்பின் பிரகாரமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புச் செல்லுமாக இருந்தால், வடக்கிலும் கிழக்கிலும் அனைத்து சபைகளுக்கும், எமது ஆதரவைத் தரத் தயாராக இருக்கிறோம் என்று நாம் கூறினோம்.

“எனவே, நீங்கள் கட்சித் தலைவர்களின் கூடத்தை ஒழுங்கு செய்யுங்கள். அந்தக் கூட்டத்திலே இணக்கப்பாடு எட்டப்பட்டால், வடக்கு, கிழக்கிலே எமது ஆதரவை வழங்கலாம் என்றும் கூறி இருந்தோம். ஆனால் அடைக்கலநாதன், பின்னர் எம்முடன் தொடர்புகொள்ளவில்லை” என, சிவசக்தி ஆனந்தன் எம்.பி தெரிவித்தார்.

மேலும், உள்ளூராட்சி சபைகளிலே தமது பணிகள் என்ன, தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினை விடயத்தில் தமது பணிகள் என்ன என்பதில், தமது கட்சி மிகத் தெளிவாக உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X