2025 ஓகஸ்ட் 30, சனிக்கிழமை

யாழில் ஒரே நாளில் முப்பெரும் போராட்டம்

Editorial   / 2017 ஒக்டோபர் 26 , பி.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.லாபீர், எஸ்.நிதர்ஷன், றொசாந்த்

யாழ்ப்பாணத்தில் வெவ்வேறு மூன்று பகுதிகளில் இன்று (26) ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

வீட்டுத்திட்டத்தில் முஸ்லிம் மக்கள் புறக்கணிக்கப்படுவதாகத் தெரிவித்து, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, யாழ் முஸ்லிம் சமூகமும்; சுற்றுலா மையத்தை அகற்றுமாறு கோரி அக்கரை மக்களும்; நியமனம் வழங்கக் கோரி தொண்டராசிரியர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ். முஸ்லிம் சமூகம்:

யாழ். மாவட்ட மீள்குடியேற்ற வீட்டுத்திட்டத்தில் முஸ்லிம் மக்கள் புறக்கணிக்கப்படுவதாகத் தெரிவித்து, அதற்குக் கண்டனம் தெரிவித்தும், முஸ்லிம்களுக்கான வீட்டுத்திட்டத்தை முழுமையாக அமுலாக்குமாறு வலியுறுத்தியும், யாழ். மாவட்ட முஸ்லிம் சமூகத்தினரால், யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்னால், காலை 8 மணி முதல் 10 மணிவரை, கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, மத்திய அரசாங்கத்துகான தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றை, ஆர்ப்பாட்டக்காரர்கள், யாழ். மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளர் சுகுணவதி தெய்வேந்திரத்திடம் கையளித்தனர்.

மேலும் குறித்த ஆர்ப்பாட்டத்தின்போது, வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா, மாகாணசபை உறுப்பினர்களான அயூப் அஸ்மின், இம்மானுவேல் ஆர்னோல்ட் ஆகியோர், ஆர்ப்பாட்டக்காரர்களைச் சந்தித்ததுக் கலந்துரையாடியதுடன், தீர்வைப் பெற்றுத்தர தாம் நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தனர். இதன்பின்னர் ஆர்ப்பாட்டம் நிறைவுபெற்றது

அக்கரை மக்கள்:

யாழ். தொண்டைமானாறு அக்கரை கடற்கரை சுற்றுலா மையத்தை அகற்றி, சிறுவர் பூங்காவாக மாற்றுமாறு வலியுறுத்தி, அப்பிரதேச மக்கள், வட மாகாணசபைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த சுற்றுலாத் தலத்தின் காரணமாக அப்பகுதியில் கலாசார சீரழிவுகள் அரங்கேறி வருகின்றன என, அக்கரை பிரதேச மக்கள் கடந்த சில காலமாக தொடர்ச்சியாகப் போராடிவரும் நிலையில், இவ்விடயத்தில் வடமாகாணசபையினர் உடனடியான தீர்வை வழங்க வேண்டுமென வலியுறுத்தும் விதமாக, இப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

தொண்டராசிரியர்கள்:

வட மாகாணத்தில் தொண்டர் ஆசிரியர்களாகக் கடமையாற்றியோரில், ஆசிரியர் சேவைக்குள் உள்ளீர்க்க மத்திய கல்வி அமைச்சால் அனுமதிக்கப்பட்ட 182 பேரின் நியமனத்தை, இந்த மாத இறுதிக்குள் வழங்க வடக்கு மாகாண சபை நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி, சம்பந்தப்பட்ட தொண்டராசிரியர்கள், வடக்கு மாகாண சபைக்கு முன்பாகக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். வடமாகாண சபையின் 105ஆவது அமர்வு நேற்று நடைபெற்றுக்கொண்டிருந்த போது, நேர்முகத் தேர்வில் தோற்றி, ஆசிரிய நியமனத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட 182 தொண்டராசிரியர்கள், தமக்கான நியமனத்தை வடமாகாண சபை உறுப்பினர்கள் தடுக்கின்றனர் எனக் குற்றஞ்சாட்டி, கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

182 தொண்டராசிரியர்களின் தெரிவில் குழறுபடிகள் இருப்பதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் கூறி, உறுப்பினர்களுக்கிடையில் உள்ள விரோதம் காரணமாக, எமது நியமனத்தை இடைநிறுத்தி வைத்துள்ளனர்.

எனவே, தமக்கான நியமனம் கிடைக்காவிடின், தொடர்ந்தும் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொண்டராசிரியர்கள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .