2025 மே 13, செவ்வாய்க்கிழமை

யாழில் கொரோனா, ஊரடங்கின் எதிர்காலம்; ’இப்போதைக்கு எதுவும் கூற முடியாது’

Editorial   / 2020 ஏப்ரல் 15 , பி.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். நிதர்ஷன்

யாழ். மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படுவது தொடர்பாகவும் கொரோனா தாக்கத்தின் எதிர்காலம் தொடர்பாகவும், இப்போது எதையும் கூற இயலாது. அதைப்  பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்” என, யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.  

சமூக மட்டத்தில் கொரோனா தொற்று அடையாளம் காணப்படவில்லை. தனிமைப்படுத்தலில் உள்ளவர்களுக்கே அடையாளம் காணப்படுகின்ற போதும், நாம் பாதுகாப்பாக இருக்கவேண்டும் எனவும் பணிப்பாளர் கூறினார்.

போதனா வைத்தியசாலையில் இன்று (15) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், ஊரடங்குத் தளர்வு மற்றும் தற்போதைய நிலைமை குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், “சுகாதார அமைச்சு, கொரோனா எதிர்ப்புச் செயலணி, உயர்நிலைச் சுகாதார அதிகாரிகள் போன்றவர்களாலேயே, ஊரடங்கு தொடர்பான முடிவுகள் எட்டப்படுகின்றன. அவர்கள் எங்களுடைய கருத்துகளைக் கேட்கும்போது, நாங்களும் கூறுகிறோம். எங்களுடைய பணி, நோயாளர்களைக் கண்டறிவதும் சிகிச்சையளிப்பதுமே” என்றார்.

“பொதுவான ஒரு நடைமுறையை அரசாங்கம் பின்பற்றுமாறு கூறினால், அதனை நாங்கள் பின்பற்ற வேண்டும். ஆகவே, ஊரடங்குத் தளர்வு பற்றியும், நோயின் எதிர்காலம் பற்றியும் இப்போதைக்கு எதையும் கூற இயலாது. பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

“வடமாகாணத்தில் நோயாளர் எண்ணிக்கை குறைவு மற்றும் தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள் மட்டுமே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்ற வகையில், நாம் பாதுகாப்புடன் இருக்கிறோம். இனியும் பாதுகாப்பாக இருக்கவேண்டும்” என்றும், பணிப்பாளர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X