2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

யாழ். இளைஞனின் மரணத்திற்கு காரணம் வெளியானது

Freelancer   / 2022 ஒக்டோபர் 15 , மு.ப. 07:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். றொசாந்த் 

யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் வேம்படி சந்திக்கு அண்மையில் புதிதாக அமைக்கப்படும் கட்டடத் தொகுதியில் சடலமாக மீட்கப்பட்டவர் நிலைதடுமாறி படிக்கட்டுகளில் வீழ்ந்து தலையில் ஏற்பட்ட படுகாயம் காரணமாகவே உயிரிழந்துள்ளார் என விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் சம்பவ இடத்தில் இடம்பெற்ற விசாரணையின் போது அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி காணொளி பதிவின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பதிவாகிய சிசிரிவி காணொளி பதிவை சான்றுப்பொருளாக நீதிமன்றில் முற்படுத்த உத்தரவிட்ட நீதிவான், சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனையின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்க கட்டளையிட்டார்.

இந்தச் சம்பவம் நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு  11.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் திருநெல்வேலியைச் சேர்ந்த அன்னலிங்கம் கிரிசாந்தன் (வயது-38) என்ற அலுமினிய தள வேலை ஒப்பந்தக்காரரே இவ்வாறு உயிரிழந்தார்.

யாழ்.நகர் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில்  உயிரிழந்தவரும் அவரோடு நெருக்கமுள்ள நால்வரும் மது அருந்தியுள்ளனர். அதன்போது அங்கு கைகலப்பு ஏற்பட்டுள்ளது. 

அதில் உயிரிழந்தவருடன் சென்ற ஒருவர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

பின்னர் கட்டட வேலைத் தளத்துக்குச் சென்ற அவர் மூன்றாம் மாடியிலிருந்து நிலைதடுமாறி வீழ்ந்துள்ளார். 

படிக்கட்டுகளில் வீழ்ந்த அவர் கீழ் தளம் வரை சறுக்கி வந்து பாதுகாப்பு கம்புகள் பொருத்தப்படாததால் படிக்கட்டுகளின் வெளிப்பகுதியில் சிக்குண்டுள்ளார். 

அதன்போது அவரது தலையில் ஏற்பட்ட படுகாயம் காரணமாக அதிகளவு குருதிப் போக்கினால் உயிரிழந்துள்ளார் என்பது சம்பவ இட விசாரணையில் கண்டறியப்பட்டது.

ஹோட்டலில் இடம்பெற்ற கைகலப்பில் படுகாயமடைந்த நபரைத் தாக்கிய குற்றச்சாட்டில் எட்டுப் பேர் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அது தொடர்பில் பிறிதொரு வழக்குத் தாக்கல் செய்து நாளைய தினம் சனிக்கிழமை  நீதிமன்றில் அவர்கள் முற்படுத்தப்படுவார்கள் என்று பொலிஸார் கூறினர். (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X