Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
எம். றொசாந்த் / 2018 ஒக்டோபர் 03 , மு.ப. 11:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் மீதான கொலைக் குற்றச்சாட்டுப் பத்திரத்தில் 42 சாட்சிகள் இணைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 20 பேர் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலையாகினர். எனினும் சுருக்கமுறையற்ற விசாரணை வரும் நவம்பர் 13ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் விஜயகுமார் சுலக்சன், நடராஜா கஜன் ஆகியோர் கொக்குவில் குளப்பிட்டியில் 2016ஆம் ஆண்டு ஒக்டோபர் 20ஆம் திகதி நள்ளிரவு பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர்.
சம்பவம் நடைபெற்ற மறுநாள் முற்பகல், யாழ்ப்பாணம் பொலிஸார் விபத்து என்ற அடிப்படையில் போக்குவரத்துப் பிரிவு பொலிஸார் ஊடாக யாழ்ப்பாணம் நீதவானுக்கு அறிக்கை சமர்ப்பித்தனர்.
மாணவர்களின் சடலங்கள் நள்ளிரவே பொலிஸாரால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டன. அதனால் சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்ட போக்குவரத்துப் பொலிஸார், விபத்துச் சம்பவம் என்ற வகையிலேயே நீதிவானுக்கு முதல் அறிக்கை முன்வைத்தனர்.
சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன், சட்ட மருத்துவ அதிகாரியின் உடற்கூற்று விசாரணையும் ஆராய்ந்து வழக்கை துப்பாக்கிச் சூட்டில் கொலை என்றே முன்னெடுக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
பொலிஸார் ஐவர் கைது
அதனடிப்படையில் இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் பொலிஸ் மா அதிபர் பாரப்படுத்தினார். குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகள் உடனடியாக ஆரம்பித்து, யாழ். பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட ஐந்து பொலிஸாரைக் கைது செய்தனர். அவர்கள் ஐவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
பொலிஸார் ஐவரும் பிணையில் விடுவிப்பு
பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஐவரும் 11 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் யாழ். மேல் நீதிமன்றால் கடந்த செப்டெம்பர் மாதம் பிணையில் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் ஐவரும் பொலிஸ் சேவையில் மீளவும் இணைக்கப்பட்டுள்ளனர்.
மூன்று பொலிஸார் விடுவிப்பு
வழக்கில் குறிப்பிடப்பட்டிருந்த ஐந்து சந்தேகநபர்களில் இரண்டாவது சந்தேகநபர் எக்கநாயக்க முதியான்சலாகே ஜயவர்த்தன, நான்காவது சந்தேகநபர் தங்கராஜன் லங்காமணன், ஐந்தாவது சந்தேகநபர் கமல விதானகே நவரத்ன பண்டார ஆகியோரை வழக்கிலிருந்து விடுவிப்பதாக சட்ட மா அதிபரின் அறிவுறுத்தலின் அடிப்படையில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றுக்கு அறிக்கையிட்டனர்.
கொலைக் குற்றச்சாட்டு
மேலும் முதலாவது சந்தேகநபர் சரத் பண்டார திசாநாயக்க, மூன்றாவது சந்தேகநபர் சமர ஆராய்சிலாகே சந்தன குமார சமர ஆராச்சி ஆகிய இருவருக்கும் எதிராக இலங்கை குற்றவியல் நடைமுறை சட்டக்கோவையின் 296ஆம் பிரிவின் கீழான கொலைக் குற்றச்சாட்டின் கீழ் பிராது பத்திரத்தை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு சுருக்கமுறையற்ற விசாரணைக்காக இன்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது. குற்றச்சாட்டுப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 42 சாட்சிகளும் மன்றினால் இன்று அழைக்கப்பட்டிருந்தனர். எனினும் 20 சாட்சிகள் இன்று மன்றில் முன்னிலையாகினர். பதில் நீதவான் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. பிரதான நீதிவான் முன்னிலையில் வழக்கு சுருக்கமுறையற்ற விசாரணைக்காக அடுத்த மாதம் 13ஆம் திகதி எடுத்துக் கொள்ளப்படும் என பதில் நீதிவான் அறிவித்தார். அன்றைய தினம் மன்றினால் அழைக்கப்பட்ட சாட்சிகளை முன்னிலையாகுமாறு பதில் நீதிவான் உத்தரவிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
1 hours ago
1 hours ago