2025 மே 10, சனிக்கிழமை

யாழ். விவசாயிகளிடம் அறவிடப்பட்ட விலைக் கழிவு நிறுத்தப்பட்டது

Editorial   / 2020 செப்டெம்பர் 15 , பி.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

 

யாழ்ப்பாணம் மாவட்டச் சந்தைகளில் உள்ள விவசாயிகளிடம் அறவிடப்படும் 10 சதவீத விலைக் கழிவை உடனடியாக நிறுத்துமாறு, வடக்கு அதிகாரிகளுக்கு, விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே உத்தரவிட்டுள்ளார்.

வடக்கு மாகாண விவசாயிகள் முகங்கொடுத்துவரும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கு, விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே, இன்று (15) வடக்கு மாகாணத்துக்கு விஜயமொன்றை ​மேற்கொண்டிருந்தார்.

இதன்போது, யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விவசாய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தைத் தலைமைத் தாங்கி நடத்தினார்.

இக்கூட்டத்தின்போது, வடக்கில் குறிப்பாக, யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள சந்தைகளில், விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் பொருள்களை விற்பனை செய்யும் போது, சந்தைகளில் 10 சதவீத விலைக் கழிவு அறவிடும் நடைமுறையை நிறுத்துமாறு, அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவிடம் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதனைக் கருத்திற்கொண்ட அமைச்சர், அந்த  விலைக் கழிவு நடவடிக்கையை உடனடியாக இடைநிறுத்துமாறு, வடக்கு மாகாண ஆளுநருக்கும் உள்ளூராட்சி ஆணையாளருக்குப் பணிப்புரை விடுத்தார்.

அவ்வாறு, அந்த விலைக் கழிவை நிறுத்தத் தவறினால், சம்பந்தப்பட்டோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும், மஹிந்தானந்த அலுத்கமகே, பொலிஸாரைக் கேட்டுக்​கொண்டார்.

மேலும், வடக்கில், கமநல சேவைகள் திணைக்களத்துக்குரிய தலைமை காரியாலயம் கட்டடத்துக்கு அடுத்த முறை சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு – செலவுத் திட்டத்தின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்வதாகத் தெரிவித்த அவர், ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட நிதியை க் கொண்டு, புதிய கட்டட  வேலைத்திட்டத்தை உடனடியாக ஆரம்பிக்குமாறும், சம்பந்தப்பட்டோருக்கு  உத்தரவிட்டார்.

இவ்விஜயத்தில், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர்களான சஷீந்திர ராஜபக்‌ஷ, டி.பி. ஹேரத் மற்றும் மொஹான் டி சில்வா,  நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும்,  யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவருமான அங்கஜன் இராமநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

முன்னதாக, யாழ்ப்பாணம் – கோப்பாய், அச்செழு பகுதிக்குச் சென்ற அமைச்சர், திராட்சை அறுவடை விழாவில் கலந்துகொண்டார்.

இதைத்தொடர்ந்து, அங்கு நெற் பயிர்ச்செய்கையை ஏர் உழுது, நெல் விதைத்து ஆரம்பித்து வைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X