2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

வெங்காய உற்பத்தியில் யாழ்.மாவட்டம் முதலிடம்

Niroshini   / 2016 மே 12 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் வெங்காய உற்பத்தியில் யாழ். மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. ஏறத்தாள 4,200 ஹெக்டேயர் நிலப்பரப்பில் ஆண்டுதோறும் 55,000 மெற்றிக்தொன் வெங்காயம் யாழ்ப்பாணத்தில் விளைவிக்கப்படுகிறது என வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்தார்.

விவசாயிகளுக்கு வெங்காய விதைகள், வெங்காயக் குமிழ்கள் உட்பட நடுகைப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி திருநெல்வேலி மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் வியாழக்கிழமை (12) நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

'யாழ்.மாவட்டத்தின் விவசாய உற்பத்திகளில் வெங்காயம் பிரதான இடத்தைப் பிடித்துள்ளது. ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தின் விவசாய வருமானத்தில் புகையிலை பெரும் பங்களிப்பை வழங்கியிருந்தது. ஆனால், புகையிலை செய்யப்படும் பரப்பளவு தற்போது குறைந்து வருகின்றது.

புகையிலை உற்பத்தியை முற்றாக நிறுத்துவதற்கும் காலஎல்லை ஒன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

இந்நிலையில், வெங்காய உற்பத்தியை நாம் அதிகரித்தால், புகையிலைச் செய்கையை நிறுத்துவதனால் ஏற்படும் வருமான இழப்பை ஈடுசெய்யலாம்.

வெங்காயச் செய்கையில் வெங்காயக் குமிழ்களை நடுகை செய்வதைவிட, வெங்காய விதைகளைப் பயன்படுத்துவது பொருளாதார ரீதியாக நன்மைகளைத் தரக்கூடியது. உற்பத்திச் செலவு குறைவு என்பதோடு, விதைகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் வெங்காயம் கூடுதலான நோய் எதிர்ப்புச் சக்தியையும் கொண்டுள்ளது. இதனால் பீடைக் கொல்லிகளுக்கு நாம் செலவு செய்யும் பணமும் மீதமாகிறது.

இதனடிப்படையில், எமது விவசாய அமைச்சு இப்போது விதை வெங்காயத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவித்து வருகின்றது. விவசாயத் திணைக்களத்தின் ஊடாக வெங்காயச் செய்கையை மேற்கொள்வதற்கு வெங்காய விதைகளையும் வெங்காய விதைகளை உற்பத்தி செய்வதற்கு வெங்காயக் குமிழ்களையும் வழங்கி வருகிறோம்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X