2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

விபத்தில் படுகாயமடைந்தவர் 8 மாதங்களின் பின்னர் உயிரிழப்பு

Princiya Dixci   / 2017 ஜனவரி 31 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

ஏ-9 நெடுஞ்சாலையின் ஓமந்தை பன்றிக்குஎய்தகுளத்தடியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயங்களுக்குள்ளான நிலையில் கடந்த 8 மாத காலமாகச் சிகிச்சை பெற்று வந்த இளம் குடும்பஸ்தர், சிகிச்சை பலன் இன்றி, ஞாயிற்றுக்கிழமை (29) உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.

திருமுறுகண்டி, முல்லைத்தீவைச் சேர்ந்த தம்பிராஜா ஜெயன்சன் (வயது 27) என்பவரே உயிரிழந்தவராவார்.

கடந்த வருடம் மே மாதம் 14ஆம் திகதி, மேற்படி இளைஞன், பழுதடைந்த பிக்கப் வாகனத்தினை ஹன்ரர் வாகனத்தில் கட்டி இழுத்துக்கொண்டு ஏ-9 நெடுஞ்சாலை வழியாக வந்துள்ளார். இதன்போது, கட்டியிருந்த கயிறு அறுந்துள்ளது.

இதனையடுத்து வாகனத்தினை வீதியோரமாக நிறுத்தி விட்டு அறுந்த கயிற்றினை முடிந்துகொண்டு இருந்த போது, கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்து சுற்றுலா பயணிகளின் பஸ், இரண்டு வாகனங்களுக்கும் இடையில் வைத்து மோதி தள்ளியுள்ளது.

இதனால் தலையில் காயங்களுக்குள்ளான குறித்த நபர், வவுனியா வைத்தியசாலையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் மற்றும் இதர வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும், 8 மாத காலமாக கோமா நிலையில் இருந்தவர் உயிரிழந்துள்ளார்.

மேற்படி உயிரிழப்புக்கு கிருமி தொற்று உடலில் பரவியதாலேயே இவர் உயிரிழந்துள்ளார் என மருத்துவ பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X