2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

வட மாகாணத்தில் மீன்பிடி துறைமுகங்கள்

Editorial   / 2018 ஜூன் 27 , பி.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட மாகாணத்தில், பருத்தித்துறை மற்றும் பேசாலை ஆகிய பகுதிகளில், புதிதாக 2 மீன்பிடி துறைமுகங்களும் யாழ்ப்பாணம் - மண்டைதீவில் நங்கூரம் இடுவதற்கான வசதிகளையும் அமைப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

வட மாகாணத்தில், பேண்தகு கடற்றொழில் அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் முகமாகவே, இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை கரையோரத்தில், சுமார் மூன்றில் இரண்டு பகுதி வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களுக்கு உட்பட்டதாக அமைந்துள்ளது. இந்தப் பிரதேசங்களில், வாழ்வாதார அபிவிருத்திக்கு பயன்படுத்தக்கூடிய முக்கிய தொழிற்றுறையாகக் கடற்றொழில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதற்கமைய, இந்தப் பிரதேசத்தில், கடற்றொழில் தொழிற்றுறையை மேம்படுத்துவதற்கு தேவையான அத்தியாவசிய வசதிகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் மேம்படுத்துவதற்காக, 158 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை வழங்குவதற்கு, ஆசிய அபிவிருத்தி வங்கி உடன்பட்டுள்ளது.

இதனடிப்படையில், பருத்தித்துறை மற்றும் பேசாலை ஆகிய பகுதிகளில் 2 மீன்பிடி துறைமுகங்களும் யாழ்ப்பாணம் - மண்டைதீவில் நங்கூரம் இடுவதற்கான வசதிகளையும் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதேபோன்று, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் 8 கடற்றொழில் இறங்குதுறைகளும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 6 கடற்றொழில் இறங்குதுறைகளும் கிளிநொச்சி மாவட்டத்தில் 3 கடற்றொழில் இறங்குதுறைகளையும் மேம்படுத்துவதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளன.

மேலும், கடற்றொழில் துறைமுகம் நங்கூரமிடும் இடங்கள் மற்றும் இறங்குதுறைகளை நிர்மாணித்தல், அபிவிருத்தி செய்தல் நீர் உயிரின உற்பத்தி மற்றும் வாழ்வாதார அபிவிருத்தி உள்ளிட்ட முக்கிய மூன்று விடயங்களின் கீழ், இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதற்கமைய, இந்தத் திட்டத்துக்கான ஆலோசனைகளை வழங்குவதற்கென, நிறுவனம் ஒன்றை தெரிவுசெய்வதற்கான பணிகளை முன்னெடுப்பதற்கான அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ள நிலையில், அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .