2025 ஜூலை 17, வியாழக்கிழமை

வடமாகாணசபை உறுப்பினர்களின் குமுறல்

Menaka Mookandi   / 2016 பெப்ரவரி 26 , மு.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

ஒவ்வொரு பிரதேச செயலகங்களுக்கும் ஒவ்வொரு வடமாகாண சபை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்ட விடயத்தில், தங்களுக்குரிய பிரதேசங்களில் தாங்கள் நியமிக்கப்படாமையால், தங்களது அரசியல் செல்வாக்கு குறைந்துவிடும் என வட மாகாணசபை உறுப்பினர்கள் சிலர், தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

யாழ். மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலகங்களிலுமுள்ள தேவைகள் மற்றும் அபிவிருத்திகள் தொடர்பில் செயற்படுவதற்காக வடமாகாண சபையின் உறுப்பினர்களை, ஒவ்வொரு பிரதேச செயலக ரீதியாகவும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நியமித்திருந்தார். இது தொடர்பில் நேற்று வியாழக்கிழமை (25) கைதடியில் நடைபெற்ற வடமாகாண சபையில் விவாதம் நடைபெற்றது.

இதன்போது, 'தங்களுக்கு பொருத்தமான பிரதேச செயலகம் தரப்படாமல் பொருத்தமில்லாத பிரதேச செயலகம் தந்தமையால் அங்கு சரியாகச் செயற்படமுடியாது. முதலமைச்சர் இது தொடர்பில் பரிசீலனை செய்து பொருத்தமான பிரதேச செயலகம் தரவேண்டும்' என உறுப்பினர் ஆயூப் அஸ்மின் கூறினார்.

'நான் வடமராட்சி கிழக்கைச் சேர்ந்தவன். ஆனால், எனக்கு நெடுந்தீவு தரப்பட்டுள்ளது. அங்கு சென்று வருவதற்குள் நான் களைத்துவிடுவேன். மக்களுடன் கலந்துரையாட முடியாது. மேலும், எனக்கு அங்கு சென்று வருவதற்கு எரிபொருள் செலவும் கிடைக்காது. வினைத்திறனாகவும் செயற்படமுடியாது' என ச.சுகிர்தன் தெரிவித்தார்.

இதன்போது குறுக்கிட்ட உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், 'உறுப்பினர்களில் பலர் தங்கள் பிரதேச செயலகங்களில் நடைபெறுகின்ற ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்துக்கே வருவதில்லை. நான் அனைத்து கூட்டக்களுக்கும் சென்றிருக்கின்றேன். அனைவரும் எம்மக்களே. இந்தப் பிரதேச மக்களுக்குத் தான் சேவை செய்வோம் என்றில்லை' என்றார்.

'ஏதோவொரு வகையில் நாங்களும் அரசியல்வாதிகள் தான். வேறு இடங்களுக்குச் சென்றால், எங்களுக்கான செல்வாக்கை இழக்க நேரிடும். பல இடங்களிலுள்ள மக்களுக்கு எங்களை தெரியாது. எங்களை அடையாளப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என உறுப்பினர் இமானுவல் ஆர்னோல்ட் தெரிவித்தார்.

'உங்களுக்கு உங்கள் பிரதேசம் தரவில்லையென்ற கவலை. ஆனால் எனக்கோ, ஒரு பிரதேசமும் தரவில்லையென்ற கவலை. எனக்கு ஏன் ஒரு பிரதேச செயலகம் தரப்படவில்லையென கோரி முதலமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தேன். ஆனால், அது தொடர்பில் இன்றுவரை பதில் இல்லையென' அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

'எங்களை எந்தப் பிரதேசத்துக்கு நியமித்தாலும் அங்கு சேவை செய்வோம். எல்லா மக்களும் எங்களுக்கு ஒரே மாதிரியானவர்கள் தான்' என உறுப்பினர்களான அனந்தி சசிதரன், எம்.கே.சிவாஜிலிங்கம், துரைராசா ரவிகரன் ஆகியோர் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X