2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

வட்டுக்கோட்டை இளைஞன் மரணம்; நீதிமன்றம் அதிரடி

Freelancer   / 2023 நவம்பர் 24 , பி.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட்டுக்கோட்டை இளைஞனின் மரணம் ஒரு ஆட்கொலை என்ற முடிவுக்கு வந்த யாழ். நீதவான் நீதிமன்றம் சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸாரை உடன் கைது செய்து மன்றில் முற்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளது

வட்டுக்கோட்டை பொலிஸாரினால் நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் கைது செய்யப்பட்டு, சித்திரவதைக்கு உள்ளான நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தமை தொடர்பிலான வழக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

வழக்கு விசாரணையில் பெருமளவான சட்டத்தரணிகள் முன்னிலையாகி இருந்தனர்.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த சிரேஸ்ட சட்டத்தரணி ந.சிறீகாந்தா நீதிமன்ற உத்தரவுகள் தொடர்பாக கருத்து தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்கையில், 

இன்று  பிற்பகல் ஆரம்பாகி   நடைபெற்ற மரண விசாரணையின் அடிப்படையில் யாழ்ப்பாண நீதவான் சில கட்டளைகளை வழங்கினார்.

இன்றைய தினம் ஐந்து சாட்சியங்கள் தமது சாட்சிகளை பதிவு செய்தனர். அதில் மூன்றாம் சாட்சி,  இறந்தவருடன் தானும் தாக்குதலுக்கு இலக்காகியதாக கூறியதை கொண்டு, பெயர் குறிப்பிட்டு அடையாளம் கூறிய  இரண்டு பொலிஸார் மற்றும் அங்க அடையாளங்களை கூறிய மூவர் ஆகிய ஐவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்துமாறு யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ்  அத்தியட்சகருக்கு கட்டளையிடப்பட்டது.

பொலிஸ் நிலையத்திற்கு வெளியில் தாக்கப்பட்டதாக கூறியதையடுத்து, குறித்த இடங்களை விஞ்ஞான ரீதியாக அடையாளம் காண சாட்சியை அழைத்து செல்ல உதவி பொலிஸ் அத்தியட்சகருக்கு நீதிமன்றம் கட்டளையிட்டது. இதன்போது சாட்சியின் பாதுகாப்பு கருதி இரண்டு சட்டத்தரணிகள் உடன் செல்ல நீதிமன்றம் அனுமதியளித்தது.

சாட்சியமளித்த சட்ட வைத்திய அதிகாரி மயூதரன் காயத்தை விபரித்ததோடு காயம் காரணமாக சிறுநீரகம் பாதிக்கப்பட்டதே பிரதான காரணம் என கூறியதன் அடிப்படையில் நீதிமன்றம் கட்டளையை வழங்கி இருக்கிறது.

மரண விசாரணைகளுக்கு பின்னர் சம்பந்தப்பட்ட பொலிஸார் நாட்டை விட்டு வெளியேறாத வகையில் பயணத்தடை மேற்கொள்ள முடியும் என நீதிமன்றம் பணித்ததால் உதவி பொலிஸ் அத்தியட்சகர் அதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

இதன்போது தங்களது விசாரணையில் நான்கு பொலிஸார் அடையாளம் காணப்பட்டதாக உதவி பொலிஸ் அத்தியட்சகர் நீதிமன்றத்தில் தெரிவித்ததுடன் சாட்சியின் அடையாளத்தை கொண்டு மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டார்.

இதுவொரு ஆட்கொலை என்ற நிலைப்பாட்டுக்கு நீதிமன்றம் வந்துள்ளது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X