2025 மே 21, புதன்கிழமை

‘வர்த்தக நடவடிக்கைகளை 9 மணி வரை நடத்த முன்வரவும்’

Editorial   / 2018 ஜூன் 27 , பி.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

நகரப்புறங்களில் காணப்படுகின்ற வர்த்தக நிறுவனங்கள், தமது வர்த்தக நடவடிக்கைகளை ஆகக் குறைந்தது இரவு 9 மணிவரை நடாத்த முன்வரவேண்டுமென, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியிருக்கிறார்.

நெல்லியடி வாணிபர் கழக அனுசரணையில், 25 வருடங்களுக்கும் மேற்பட்ட காலப்பகுதியில், வர்த்தக சேவையைப் பூர்த்தி செய்தவர்களையும் அவர்களுடைய சமூகப் பணிகளையும் பாராட்டி ஏற்பாடுசெய்யப்பட்ட கௌரவிப்பு நிகழ்வு, யாழ்ப்பாணம் பீச் ஹோட்டலின் விக்னேஸ்வரா மண்டபத்தில், நேற்று (26) மாலை நடைபெற்றது. இதன்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்துரைத்த அவர்,

எதிர்பாராத ஓர் அசாதாரண சூழ்நிலை ஏற்படுகின்றபோது, வட பகுதியின் உணவுத் தேவையை ஈடுசெய்யக்கூடிய அளவுக்கு உணவுப் பொருட்களைக் களஞ்சியப்படுத்தி வைத்திருக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும் எனவும், ஆனால் எமது முன்னணி வர்த்தகர்களின் உணவுக் களஞ்சியங்களுடன் ஒப்பிடும்போது, அரச களஞ்சியங்களின் இருப்பு மிகக் குறைவாக உள்ளதெனவும் குறிப்பிட்டார்.

மேலும், சமயக் கோட்பாடுகளிலும் கூட வர்த்தகம் பற்றி தெளிவாக எடுத்துக் கூறப்படுகின்றதெனவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், வர்த்தகம் என்பது மிகப்பெரியதொரு கலை எனத் தெரிவித்த அவர், அதனை முறையாகக் கற்று வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றபோதே அந்த வர்த்தகம் சிறப்புற அமைகின்றதெனவும் குறிப்பிட்டார்.

இன்றைய நவீன உலகின் அவசர நிலையில் எல்லா விடயங்களுக்கும் அவசரமெனக் குறிப்பிட்ட அவர், ஒரே நாளில் கோடீஸ்வரர்களாக மாறிவிட வேண்டும் என்ற அவா அனைவரிடமும் உள்ளது எனவும் இவ்வாறு பணம் ஒன்றே குறிக்கோளாக வாணிபத்தில் ஈடுபடுவோர் பலர் பல சிரமங்களுக்கு ஆளாகியுள்ளார்களெனவும் தெரிவித்தார்.

வட பகுதியில் ஏற்பட்ட நீண்ட கால யுத்தம் வர்த்தக நடவடிக்கைகளுக்கு ஒரு குறிப்பிட்ட நேர வரையறையை வகுத்துவிட்டதெனக் குறிப்பிட்ட அவர், விளைவு, அரச பணிகளில் ஈடுபடுபவர்களும் இன்னோரன்ன பணிகளில் ஈடுபடுபவர்களும் தமது கொள்வனவுகளுக்காக சனிக்கிழமை வரை பொறுத்திருக்க வேண்டி உள்ளதெனவும் இந்நிலை மாற்றப்பட வேண்டுமெனவும் தெரிவித்தார்.

எனவே, நகரப் புறங்களில் காணப்படுகின்ற வர்த்தக நிறுவனங்கள் தமது வர்த்தக நடவடிக்கைகளை ஆகக் குறைந்தது இரவு 9 மணிவரை நடாத்த முன்வரவேண்டுமெனவும் அப்போதுதான் அந்த நகரம் துடிப்பான நகரமாக மாற்றம் பெறுமெனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .