2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

வழக்கை முழுமையாக விசாரித்த பின்னரே டி.என்.ஏ அறிக்கை தொடர்பில் கூற முடியும்

Niroshini   / 2016 ஜூன் 15 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கின் முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, அது பரிசீலனை செய்யப்பட்ட பின்னரே, மரபணு அறிக்கை தொடர்பில் கூற முடியும் என ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம்.றியால் இன்று புதன்கிழமை (15) தெரிவித்தார்.

புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கு, ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை (15) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, கடந்த மே 18ஆம் திகதி வழக்கு தவணையில் குற்றப்புலனாய்வு பொலிஸாரால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த வழக்கின் மரபணு அறிக்கை தொடர்பில் விபரம் வெளியிடவேண்டும் என மாணவி சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி சுகாஸ் விண்ணப்பம் செய்தார்.

மேலும், 'கொட்டதெனியா சேயா கொலை வழக்கில் உடனே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கில் இன்னமும் தீர்ப்பு வழங்கப்படாது இருப்பதால் மக்கள் அதிருப்பதியடைந்துள்ளனர்' என மாணவி சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி சுகாஸ் இதன்போது கூறினார்.

இந்த விண்ணப்பம் தொடர்பில் நீதவான் பதிலளிக்கையில்,

'வழக்குத் தொடர்பில் முழுமையான விசாரணை மேற்கொண்டு, பரிசீலணை செய்து தான் அறிக்கை தொடர்பில் கூற முடியும். அதிருப்பதியடையும் மக்கள் தாங்களாக முன்வந்து இந்த வழக்கின் ஆதாரங்களை சொல்ல வேண்டும். அப்போது தான் நீதி கிடைக்கும். குற்றச் செய்யாதவர்களுக்கு தண்டனை வழங்கினால், அது அநீதி.

தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் தாங்கள் இந்தக் குற்றத்தைச் செய்யவில்லை என்று கூறுகின்றனர். இந்தக் கொலை தொடர்பில் தெரிந்தவர்கள் இரகசியமான முறையில் கூட சாட்சியங்களை அளிக்க முடியும்.

சாட்சியாளர்களுக்கு 100 சதவீதமான பாதுகாப்பை நீதிமன்றம் வழங்கும். இந்தக் குற்றத்தை யார் செய்தாலும், அவர்கள் இறைவனின் பாரிய தண்டனைகளிலிருந்து தப்ப முடியாது' என்றார்.
இதன்பின்னர் இந்த வழக்கு தொடர்பான விசாரணையை எதிர்வரும் 29ஆம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X