2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

வாள்வெட்டுச் சம்பங்களுக்கு ஆவா-தனு ரொக்ஸ் மோதலே காரணம்

Editorial   / 2017 நவம்பர் 16 , பி.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ்ப்பாணத்தில் இயங்கும் ஆவா குழுவுக்கும் தனு ரொக்ஸ் என்ற குழுவுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவங்களே, கடந்த தினங்களில் அம்மாவட்டத்தில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்களுக்கு காரணமாகின என்று, பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ஆவா குழுவில், சன்னா என்று அழைக்கப்படும் பிரசன்னா, தேவா, பிரகாஸ் ஆகியோர் உள்ளதாகவும் அவர்களுக்குப் பின்னால் செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்த பொலிஸார், அவர்களைத் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், தேவா மற்றும் பிரகாஸ் ஆகிய இருவரும் இந்தியாவுக்குத் தப்பிச்சென்றிருந்த நிலையில், திருச்சி பொலிஸாரால் உரிய ஆவணங்கள் இல்லாது திருச்சியில் நடமாடிய குற்றச்சாட்டில், கடந்த ஜூன் மாதம் 1ஆம் திகதி கைதுசெய்யப்பட்டனர்.

அவர்களின் கைதையடுத்து, சன்னா தலைமறைவாகினார். அவருடன் இணைந்த ஏனைய ஆவா குழு உறுப்பினர்களும் தலைமறைவாகி இருந்தனர். இந்நிலையில், ஆவா குழுவில் இரண்டாம் மூன்றாம் நிலை அதிகாரத்தில் இருந்தவர்கள், தாமே ஆவா குழுவினர் என யாழில் நடமாடி, வாள்வெட்டுச் சம்பவங்களை அரங்கேற்றினர்.

இந்நிலையில், அவர்களுக்கு இடையில் தலைமைத்துவச் சண்டை ஏற்பட்டு, நிஷா விக்டர் தலைமையில் ஒரு குழுவும் தனு தலைமையில் ஒரு குழுவும் என இரு குழுக்களாக, ஆவா குழு பிளவுபட்டது. நிஷா விக்டர் தலைமையிலான குழு Lycan எனவும் தனு தலைமையிலான குழு Rox எனவும் பெயர் சூட்டிக்கொண்டனர்.

இவ்விரு குழுக்களும், தமக்குள் பல தடவைகள் மோதிக்கொண்டுள்ளன. இதையடுத்து, 6 பேர் கைதுசெய்யப்பட்டனர். இவர்களின் கைதுகளைத் தொடர்ந்து, யாழில் வாள்வெட்டுச் சம்பவங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டன.

இந்நிலையில், தற்போது மீண்டும் ஆவா குழுவுக்கும் தனு ரொக்ஸ் குழுவுக்கும் இடையில் மோதல்கள் ஆரம்பமாகியுள்ளன. தற்போது தனு ரொக்ஸ் குழுவை இலக்கு வைத்தே தாக்குதல் சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X