2025 ஜூலை 12, சனிக்கிழமை

வித்தியா வழக்கில் விடுவிக்கப்பட்டவர் விளக்கமறியலில்

எம். றொசாந்த்   / 2017 ஒக்டோபர் 03 , பி.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில், நிரபராதி என தீர்ப்பாயத்தால் விடுவிக்கப்பட்ட நபர், குறித்த வழக்கின் சாட்சியத்தை அச்சுறுத்திய வழக்கில் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டு உள்ளார்.

வித்தியா கொலை வழக்கு விசாரணைகள், ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த காலப் பகுதியில், வழக்கின் முதலாவது சந்தேகநபரான பூபாலசிங்கம் இந்திரகுமார் என்பவர், தன்னை ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் கோபி எனும் பொலிஸ் உத்தியோகத்தர் காழ்புணர்வு காரணமாகவே இந்த வழக்கில் கைது செய்தார் எனவும் இந்த வழக்கிலிருந்து வெளியே வந்தால் கோபியை வெட்டுவேன் என நீதிமன்ற வாளகத்தில் வைத்து பகிரங்கமாக கொலை அச்சுறுத்தல் விடுத்திருந்தார்.

அது தொடர்பில் சாட்சியங்களை அச்சுறுத்தியமை எனும் குற்றச்சாட்டில் ஊர்காவற்துறை பொலிஸார் நீதிமன்றத்தில் பிறிதொரு வழக்கை இந்திரகுமாருக்கு எதிராக தாக்கல் செய்தனர். குறித்த வழக்கு விசாரணை, ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில், நீதவான் ஏ.எம்.எம். றியாழ் முன்னிலையில், இன்று (03) நடைபெற்றது.

அதன்போது, குறித்த நபருக்கு எதிராக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள முதல் அறிக்கையில், வித்தியா கொலை வழக்கின் சாட்சியம் ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை மாணவி கொலை வழக்கில் இவர் நிரபராதி என தீர்ப்பாயத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சட்டமா அதிபரால், தீர்பாயத்துக்கு தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பகிர்வு பத்திரத்தில், கோபி எனும் பொலிஸ் உத்தியோகத்தர் சாட்சியாக உள்ளாரா? இல்லையா? என்பதனை இந்த மன்று கவனத்தில் எடுக்க வேண்டிய தேவையுள்ளது.

 அதனை அறிந்து கொண்டால் மாத்திரமே, குறித்த நபருக்கு எதிராக சாட்சியங்களைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழா, அல்லது குற்றவியல் சட்டத்தின் கீழா வழக்கு நடத்த முடியும் எனும் தீர்மானத்துக்கு வர முடியும்.

ஆகவே, மாணவி கொலை வழக்கின் அத்தாட்சப் படுத்தப்பட்ட குற்றப் பகிர்வு பத்திரத்தை, யாழ். மேல் நீதிமன்ற பதிவாளரிடமிருந்து பெற்றுக் கொள்ளுமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற பதிவாளருக்கு பணிக்கிறேன் என நீதவான் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, குறித்த சந்தேகநபரை இம்மாதம் 17ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .