2025 மே 22, வியாழக்கிழமை

‘வீதி விபத்துக்கள் தொடர்பில் கரிசனை இல்லை’

எம். றொசாந்த்   / 2018 மே 10 , பி.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

“வீதி விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புக்கள் தொடர்பில் எவரும் கரிசனை கொள்வதில்லை” என வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

வடமாகாண சபை அமர்வு இன்று (10) கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வடமாகாணத்தில் கடந்த ஒரு வருட காலத்திற்குள் 68 உயிரிழப்புக்கள் வீதி விபத்தினால் ஏற்பட்டு உள்ளது. இந்த வருட ஆரம்பம் முதல் கடந்த நான்கு மாதங்களுக்குள் 16 உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளன. ஆனால் அவை தொடர்பில் பெரிதளவில் எவரும் கரிசனை கொள்ளவில்லை.

கடந்த காலங்கள் போன்று உயிரிழந்த 68 பேரும் சுட்டு படுகொலை செய்யப்பட்டு இருந்தால், இன்று வடக்கில் எவ்வாறான கொதிநிலை காணப்பட்டு இருக்கும். ஆனால் அவர்கள் விபத்தில் உயிரிழந்தமையால் எவரும் அது தொடர்பில் கரிசனை கொள்ளவில்லை.

வீதிகளில் அரச திணைக்கள வாகனங்கள் அதிவேகத்தில் பயணிக்கின்றன. அவை வேக கட்டுபாடுகளை கவனத்தில் எடுப்பதில்லை. எத்தனையோ அரச திணைக்கள வாகனங்கள் வீதி விபத்துக்கு உள்ளாகி இருக்கின்றன. அவற்றினை மூடி மறைத்து அந்த வாகன சாரதிகள் காப்பாற்றப்பட்டு இருக்கின்றார்கள்.

எனவே முதலில் அரச திணைக்கள வாகனங்கள் வேக கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும். அதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வீதி விபத்துக்களை தடுப்பதற்கு பொலிஸாரும் தவறி விடுகின்றார்கள். பொலிஸார் வீதி ஒழுங்குகளை கடைப்பிடிப்பதில்லை. குறிப்பாக கண்டி வீதியில் தொடர் வெள்ளை கோட்டில் வாகனங்களை மறிக்கின்றார்கள். அதனால் பின்னால் வரும் வாகனங்கள் பொலிஸாரின் கண் முன்னாலே வெள்ளை கோட்டை தாண்டி செல்கின்றனர்.

பொலிஸார் கையூட்டுக்கள் வேண்டுவதும் அதிகம். சில இடங்களில் போக்குவரத்து பொலிஸாரின் மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்டு இருக்கும் பெட்டியின் மூடி திறந்தே இருக்கும். சாரதிகள் உண்டியல் போன்று அதற்குள் பணத்தினை போட்டு விட்டு செல்கின்றார்கள். எனவே இவை தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுப்பதன் ஊடாகவே வீதி விபத்துக்களை தடுக்க முடியும்” என தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X