2025 ஜூலை 23, புதன்கிழமை

’வெற்றிபெறும் வரை நிதானமாகச் செயற்பட வேண்டும்’

Editorial   / 2017 ஓகஸ்ட் 02 , பி.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

- எஸ்.நிதர்ஷன்

“நாம் வெற்றி பெறும் வரை நிதானமாகவும் அதேவேளை சர்வதேசத்தை அனுசரித்தும் செல்ல வேண்டும்” என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்ட ஆர். ஜெயசேகரத்தின் பதவியேற்பு நிகழ்வில் நேற்று முன்தினம் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பொருளாதார, சமூக ரீதியாக அழிவடைந்துள்ள எமது பிரதேசத்தைக் கட்டியெழுப்ப வேண்டிய தேவை எமக்கு உள்ளது. பொருளாதார ரீதியான முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் சர்வதேச நாடுகளும் புலம்பெயர் அமைப்புக்களும் எம்முடன் கலந்துரையாடியுள்ளனர். அதற்கமைய ஒரு கூட்டுச் செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டுமென நாம் கோரியிருக்கின்றோம்.

பல பிரச்சனைகளும் பல தேவைகளும் உள்ள நிலையில் அதனை நிவர்த்தி செய்வதற்குரிய நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம். இவ்வாறான செயற்பாடுகளை நாம் முன்னெடுத்து வருகின்றபோது பல தடங்கல்களும் ஏற்படுத்தப்படுகின்றன. இருந்தும் அதனையும் தாண்டி நாம் பயணிக்க வேண்டியிருக்கின்றது.

தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சனைகள் முதல் அரசியல் பிரச்சனைகள் குறித்தும் அதற்குரிய தீர்வுகளைப் பெற்றுக் கொள்வது குறித்தும் பேசி வருவதுடன் அதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றோம். இவ்வாறான நிலைமையில் தான் சில பல குழப்பங்களும் ஏற்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

குறிப்பாக புதிய அரசமைப்பு வரவிருக்கின்ற நிலையில், தென்னிலங்கையிலுள்ள பௌத்த பிக்குகளும் ஊழல் மோசடிகாரர்களுமே இவ்வாறான குழப்ப நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

இன்றைய நிலையில் சர்வதேசம் எமக்கு ஆதரவாக உள்ளது. அத்தோடு பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து ஆட்சியில் அமர்ந்திருக்கின்றன. இதுவொரு நல்ல சந்தர்ப்பம். இப்படியானதொரு சந்தர்ப்பம் இதற்கு முன் எமக்கு கிடைத்ததில்லை. ஆகையால் தான் நாம் இந்தச் சந்தர்ப்பத்தை சரிவரப் பயன்படுத்துவதற்காகச் செயற்படுகின்றோம்.

குறிப்பாக, எமது கட்சித் தலைவர் தந்தை செல்வநாயகம் கூறியது போன்று நம்ப நட, நம்பி நடவாதே என்ற அடிப்படையில் நடக்கின்றோம். இன்று முன்னெடுக்கப்படுகின்ற நடவடிக்கைகளை நாங்களாகவே வலிந்து முறித்துக் கொள்ளக் கூடாது. அவ்வாறு நாமாகவே முறித்துக் கொண்டால் நாங்கள் தனிமைப்படுத்தப்பட்டு விடுவோம்.

தற்போது எமக்கு உள்ள சர்வதேச ஆதரவும் சர்வதேசத் தலையீடும் எப்போதும் இருக்குமென்று நம்ப முடியாது. ஆகவே இருக்கின்ற ஆதரவுடன் கிடைத்திருக்கின்ற சந்தர்ப்பத்தை நாம் சரியான வழியில் பயன்படுத்திக் கொண்டு இந்த முயற்சியில் நாம் வெற்றி பெற வேண்டும்.

அவ்வாறு நாம் வெற்றி பெறும் வரைக்கும் அரசியல் சாணக்கியத்துடன் நிதானமாகவும் அதே நேரம் கவனமாகவும் சர்வதேசத்தை அணைத்துக் கொண்டு செயற்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.   

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .