2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

'இலங்கை தொழில்நுட்பதுறையில் வளர்ச்சி கண்டுவருகின்றது'

Niroshini   / 2016 ஜூன் 22 , மு.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்

“இலங்கை இன்று தகவல் தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்பதுறையில் அதீத வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கின்றது. ஐ சொப்ட் போன்ற தனியார் கல்வி நிலையங்கள் இதில் மிகுந்த பங்களிப்பை நல்கி வருகின்றன” என கனேடிய உலக பல்கலைகழக சேவை நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் ஈஸ்தர் மேகிண்டோஸ் தெரிவித்தார்.

கனேடிய உலக பல்கலைக்கழக சேவை நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் ஈஸ்தர் மேகிண்டோஸ் நேற்று செவ்வாய்க்கிழமை (21) காலை புத்தளம் போல்ஸ் வீதியில் இயங்கும் ஐ சொப்ட் கல்லூரிக்கு முதன் முதலாக உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார்.

ஐ சொப்ட் கல்லூரியின் பணிப்பாளர் எம்.கே.எம். அப்ராஸின் அழைப்பின் பேரில் அங்கு தகவல் தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்பதுறையில் கல்வி பயிலும் மாணவர்களை சந்திக்கும் நோக்கிலும் ஐ சொப்ட் கல்லூரியின் புதிய கட்டட உட்கட்டமைப்புகளை பார்வையிடும் நோக்கிலும் இவரின் விஜயம் அமைந்திருந்தது.

கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற குறுகிய நேர விஷேட வைபவத்தில், அங்கு தொழில்நுட்பதுறை சார்ந்த மாணவர்கள் மத்தியிலும் அவர் உரையாற்றினார். இவருடன் கனேடிய உலக பல்கலைகழக சேவை நிறுவனத்தின் பிராந்திய குழு தவிசாளர் சிவா மற்றும் புத்தளம் மாவட்ட பொறுப்பதிகாரி சுதர்சன் ஆகியோரும் பிரசன்னமாயிருந்தனர்.

புத்தளம் நகரில் வாழும் வேலைவாய்ப்பற்ற இளைஞர், யுவதிகளுக்கு அதிகரித்த கௌரவமிக்க வேலை வாய்ப்பை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் கனேடிய உலக பல்கலைக்கழக சேவை நிறுவனத்துக்கும் ஐ சொப்ட் கல்லூரிக்குமிடையில் அண்மையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய கனேடிய உலக பல்கலைகழக சேவை நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் ஈஸ்தர் மேகிண்டோஸ், 

“இலங்கை இன்று தகவல் தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்பதுறையில் அதீத வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கின்றது. ஐ சொப்ட் போன்ற தனியார் கல்வி நிலையங்கள் இதில் மிகுந்த பங்களிப்பை நல்கி வருகின்றன. கனேடிய உலக பல்கலைகழக சேவை (வூஷ்க்) நிறுவனமானது, இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பினை அதிகரிக்கும் திட்டத்தினை  வெகு வேகமாக முன்னெடுத்து வருகின்றது.

1989ஆம் ஆண்டு நாம் இலங்கையில் எமது சேவைகளை ஆரம்பித்தாலும் கூட புத்தளம் நகரில் அண்மை காலமாகவே எமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம். சிறு குழந்தைகளுக்கு முன்மாதிரி மிக்க சமூகமாக நாம் திகழ வேண்டுமாயின்,  இளம் யுவதிகள் இந்த துறையில் அதிகம் கவனம் செலுத்த முன்வரவேண்டும்” என்றார்.

இதன்போது, அங்கு கல்வி பயிலும் தொழில்நுட்பம்துறை சார்ந்த மாணவர்களுக்கு அவர்  அன்பளிப்பு பொருட்களையும் வழங்கி வைத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X