2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

15 வயது சிறுமியை கர்ப்பிணியாக்கிய சந்தேகநபர் கைது; முந்தலில் சம்பவம்

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 08 , மு.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மும்தாஜ்)

முந்தல் பிரதேசத்தில் சிறுமி ஒருவரை கர்ப்பிணியாக்கிய 41 வயதுடைய நபரொருவரை கைது செய்துள்ள பொலிஸார், குறித்த சிறுமியையும் தமது பொறுப்பில் தடுத்து வைத்துள்ளனர். நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நேற்று புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து இம்மாதம் 20ஆம் திகதிவரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரின் மனைவி சில வருடங்களுக்கு முன் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பெற்று சென்றுள்ளதுடன், கர்ப்பமான சிறுமி அந்த அப்பெண்ணின் பெயரிலேயே மருத்துவ பரிசோதனைகளுக்குச் சென்று வந்துள்ளதாகத் தெரியவருகின்றது.

இவ்வாறு மருத்து பரிசோனைக்கு சென்றவேளை, மதுரங்குளி குடும்பநல பெண் மருத்துவ உத்தியோகத்தர், இச்சிறுமி தொடர்பான விபரங்களை பொலிஸாருக்கு வழங்கியுள்ளார். இதன்படி பொலிஸார் குறித்த சிறுமியைத் தம் பொறுப்பில் எடுத்துள்ளதுடன், சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர். கர்ப்பவதியான சிறுமி சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரும், சிறுமியும் குருநாகல் வெல்லவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள் இருவருடன் சந்தேக நபரின் 16 வயது மகனும் கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் முந்தல் பகுதிக்கு வந்துள்ளனர். அங்குள்ள தோட்டம் ஒன்றில் காவலாளியாகக் கடமையாற்றிய சந்தேக நபர் குறித்த சிறுமியை தனது மனைவியாக நடத்தி வந்துள்ளார்.

இந்தச் சிறுமியின் தந்தைக்கு இச்சிறுமியுடன் மேலும் நான்கு பிள்ளைகள் இருப்பதாக பொலிஸாரின் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. சிறுமியின் தாய் சில வருடங்களுக்கு முன்னர் இவர்களைவிட்டுப் பிரிந்து சென்று தற்போது வெளிநாட்டில் வீட்டுப் பணிப்பெண்ணாகக் கடமையாற்றி வருகிறார்.

இதன்பின்னர் தனது பிள்ளைகளை வளர்க்க வாய்ப்பின்றி மூன்று பிள்ளைகளை சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினரிடம் ஒப்படைத்துள்ளார். சிறுமியின் தந்தை குறித்த பிரதேசத்தில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த நிலையில் அங்கு கசிப்பு அருந்த அடிக்கடி வரும் சந்தேக நபர், 15 வயது சிறுமியுடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. பின்னர் அச்சிறுமியை அழைத்துக் கொண்டு முந்தல் பிரதேசத்திற்கு வந்துள்ளார்.

தற்போது பொலிஸாரின் பராமரிப்பில் உள்ள சிறுமியை பார்ப்பதற்கு பொலிஸாரின் அறிவித்தலின் பேரில் அச்சிறுமியின் தந்தை முந்தல் பொலிஸ் நிலையம் வந்துள்ளார்.

புத்தளம் பிரதி பொலிஸ் மாஅதிபர் ரவி விஜேகுணவர்தனவின் விசேட அறிவுறுத்தலின் பேரில், புத்தளம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தர்மசேன, முந்தல், கல்பிட்டி உதவி பொலிஸ் அத்தியட்சகர் ராஜபக்ஷ ஆகியோரின் வழிகாட்டலில் கீழ் முந்தல் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுஜீவ அலவத்தை தலைமையிலான முந்தல் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .