2025 ஜூலை 17, வியாழக்கிழமை

மர்ம மனிதர் பீதியால் புத்தளத்தில் பொலிஸார் ரோந்து நடவடிக்கை

Menaka Mookandi   / 2011 ஓகஸ்ட் 16 , பி.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.மும்தாஜ், எம்.என்.எம்.ஹிஜாஸ்)

நாட்டில் பரவலாக மக்களை அச்சமூட்டிக் கொண்டிருக்கும் மர்ம மனிதர்களின் பீதியால் புத்தளம் பொலிஸ் பிரிவின் 39 கிராம அதிகாரி பிரிவுகளிலும் பொலிஸார் ரோந்து நடவடிக்கையினை ஆரம்பித்துள்ளனர்.

முந்தல் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட விருதோடை, புழுதிவயல், நல்லந்தழுவை போன்ற கிராமங்களில் நேற்று முதல் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

மர்ம மனிதர்கள் தொடர்பான கதைகளால் இப்பிரதேசங்களின் மக்கள் மிகுந்த அச்சத்திற்கு உள்ளாகியுள்ளதுடன், இரவு நேரங்களில் பெண்கள் மத்தியில் பெரும் பீதி நிலவுகின்றது.

இதேநேரம் பல பகுதிகளில் பொய்யான வதந்திகளும் பரவி வருகின்றது. இவ்வாறான கதைகளைக் கேட்கும் இப்பிரதேச மக்கள் பொய் எது உண்மை எது என்று அறிய முடியாது இரவு நேரங்களில் மிகுந்த அச்சத்திற்குள்ளாகியுள்ளனர்.

இந்நிலையிலேயே புத்தளம் பொலிஸ் நிலைய பொலிஸார் இவ்வாறான கிராமங்களில் ரோந்து நடவடிக்கையினை நேற்று முதல் ஆரம்பித்துள்ளனர். ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவுக்கும் பொறுப்பாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் அப்பிரதேச கிராம அதிகாரி, சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் ஆகியோருடன் இணைந்து மக்களைத் தெளிவு படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பரவி வரும் பொய்யான வதந்திகள் தொடர்பிலும் இவர்கள் மிகுந்த கவனம் செலுத்துவதுடன், அது தொடர்பாகவும் இவர்கள் விசாரணைகளை செய்வர். மர்ம மனிதர்களின் அச்சம் நீங்கும் வரை இந்நடவடிக்கை தொடரும் என பொலிஸார் தெரிவித்தனர்.

ஒவ்வொரு கிராமங்களுக்கும் நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள் அப்பிரதேசங்களில் தங்கியிருந்து ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

முந்தல் பொலிஸ் பிரிவின் 42 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள், கருவலகஸ்வெவ பிரிவின் 11 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள், சாலியவெவ பிரிவின் 16 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உட்பட வண்ணாத்திவில்லு மற்றும் கற்பிட்டி பிரிவுகளிலும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிறிஸ் பூதம் என்று எதுவும் கிடையாது: உதவி பொலிஸ் அத்தியட்சகர்

இதேவேளை, கிறீஸ் மனிதன் என்று இவ்வுலகில் யாருமில்லை. வுடி சாராயம் காய்ச்சுவர்களும் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுப்படுபவர்களுமே இவ்வாறான கதைகளினை பரப்புவதாக தகவல் கிடைத்துள்ளது என புத்தளம் உதவி பொலிஸ் அத்தியட்சர் ஆர். சுகதபால தெரிவித்தார்.

கிறீஸ் மனிதன் தொடர்பாக விளக்கமளிக்கும் கூட்டமொன்று இன்று செவ்வாய்க்கிழமை மாலை புத்தளம் பெரிய பள்ளிவாசவில் நடைபெற்ற போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

சட்டத்தினை கையிலேடுக்க எந்தவொரு நபருக்கும் அதிகாரமில்லை. பொலிஸார் மாத்திரமே சட்டத்தினை அமுல்படுத்த முடியும். இதனை பாதுகாப்பு செயலாளர் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பிரதேசத்தில் சந்தேகத்திடத்துக்கிடமான நபர்கள் காணப்படுவார்களாயின் பொலிஸாருக்கு அறிவிக்குமாறும் அதனை விடுத்து அவர்கள் மீது கைவைக்க வேண்டாம் என்றார்.

இக்கூட்டத்தில் புத்தளம் நகர பிதா கே.ஏ.பாயிஸ் புத்தளம் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்களான முஸம்மில், அஜ்மல், புத்தளம் ஜம்மியத்துல் உலமா சபை தலைவர் அப்துல்லா மஹ்மூத், புத்தளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜி.குணரத்ன உட்பட பலர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X