2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

பேதங்களின்றி கல்வியை வழங்குவது எமது கடமையாகும்: ஜனாதிபதி

Kanagaraj   / 2014 பெப்ரவரி 23 , பி.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். எஸ். முஸப்பிர்

சிங்களவர்களாட்டும், தமிழர்களாகட்டும், முஸ்லிம்களாகட்டும் இப்படி எல்லா இனங்களின் பெற்றோர்களும் இன்று கல்வியின் பெறுமதியினை நன்கு விளங்கிக் கொண்டுள்ளார்கள்.  எனவே  மாணவர்களுக்கு கல்வியை வழங்குவதில்  இன மத  மொழி  போன்ற எவ்விதப் பாகுபாடுகளும் இன்றி அனைத்து இன மாணவர்களுக்கும்  சகல வசதிகளையும் வழங்க வேண்டியது எமது கடமையாகும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியில் இந்த மகிந்தோதய தொழில்நுட்ப விஞ்ஞான ஆய்வு கூடத்தினைத் திறந்து வைப்பதில் நான் மிகவும் சந்தோஷமடைகின்றேன்.  இன்று கல்வியின் முக்கியத்துவத்தினை இந்நாட்டின் சகல இனத்தவர்களும்  உணர்ந்துள்ளார்கள். 

சிங்களவர்களாட்டும், தமிழர்களாகட்டும், முஸ்லிம்களாகட்டும் இப்படி எல்லா இனங்களின் பெற்றோர்களும் இன்று கல்வியின் பெறுமதியினை நன்கு விளங்கிக் கொண்டுள்ளார்கள்.  எனவே  மாணவர்களுக்கு கல்வியை வழங்குவதில்  இன மத  மொழி  போன்ற எவ்விதப் பாகுபாடுகளும் இன்றி அனைத்து இன மாணவர்களுக்கும்  சகல வசதிகளையும் வழங்க வேண்டியது எமது கடமையாகும்.

புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியில் 1000 இடைநிலைப் பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மானிக்கப்பட்ட மஹிந்தோதய தொழில்நுட்ப விஞ்ஞான ஆய்வு கூடத்தினைத் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.

இவ்வைபவம் இன்று ஞாயிற்றுக் கிழமை பகல் கல்லூரியின் அஸ்வர் மண்டபத்தில் இடம்பெற்றது. கல்லூரி அதிபர் ஏ. சி. எம். யாகூப் தலைமையில் இடம்பெற்ற இவ்வைபவத்தில் தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனதுரையில் கூறியதாவது,

இன்று நாம் புத்தளத்திற்கு இவ்வாறான ஆய்வு கூடங்கள் நான்கினை வழங்கியுள்ளோம். மாணவர்கள் எதிர்காலத்தலைவர்கள். அவர்கள் இன்றைய நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. எனவே இவ்வாறான கல்வி அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.  பிள்ளைகள் தரமான கல்வியைப் பெற்றுக் கொள்ளும் போது மோசமான சிந்தனைகள் அவர்களிடமிருந்து தூரமாகின்றது.  அவர்கள் நற்பிரஜைகளாக சமூகத்தில் உருவாகுவார்கள் என்பது எனது எதிர்பார்ப்பாகும். 

இங்கு பல சமயங்களைப் பின்பற்றுபவர்களும் உள்ளனர்.  நான் பௌத்த சமயத்தினைப் பின்பற்றுகின்றேன்.  இவ்வாறு கத்தோலிக்க, ஹிந்து, இஸ்லாமிய மதங்களைப் பின்பற்றுபவர்கள் இங்குள்ளனர். எல்லா இன மக்களும் தாய் நாட்டில் ஒன்றாக வாழுகின்றார்கள்.  பிரிந்து வாழும் நிலை இல்லை. இந்நாடு உங்கள் நாடு. இந்நாடு எமது நாடு. உங்கள் நாடு இலங்கை. உங்கள் நாடு சவூதி அரேபியாவோ, மத்திய கிழக்கு நாடுகளோ, பாகிஸ்தானோ அல்ல.  எனவே இந்நாட்டு மாணவர்களுக்குச் சரியான பாதையைக் காட்டி அவர்கள் சமூகத்தில் பயனுள்ள பிரஜைகளாக வாழும் நிலையை உருவாக்க வேண்டிய வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டியது எமது கடமையாகும்.

இந்த சாஹிராக் கல்லூரி மிகவும் பழைய கல்லூரியாகும்.  இந்த கல்லூரி மாணவர்கள் நன்றாகப் படிக்க வேண்டும்.  கல்வியைப் பெற்றுக் கொள்வது உங்கள் மீது கடமையான விடயம். நபிகள் நாயகம் அவர்கள் ஒவ்வொரு முஸ்லிமும் கல்வியைக் கற்பது முக்கியமான விடயம் எனக் கூறியுள்ளார்கள்.  சாந்தி சமாதானம் சகோதரத்துவம் என்பன இஸ்லாமிய மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.  இனவாதம், மதவாதம் எமக்கு ஒருபோதும் வேண்டாம்.  நாம் எல்லோரும் ஒன்றாக வாழ்வோம். நீங்கள்தான் இந்நாட்டின் எதிர்காலம். நீங்கள்தான் இந்நாட்டின் உயிர்நாடி  என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X