2025 மே 09, வெள்ளிக்கிழமை

சிறுமியை கடத்தி, குடும்பம் நடத்திய இளைஞன் கைது

George   / 2014 ஓகஸ்ட் 24 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

பதினைந்து வயது சிறுமியை கடத்திச் சென்று குடும்ப வாழ்வில் ஈடுபட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் 19 வயது இளைஞர் ஒருவரை நேற்று சனிக்கிழமை கைது செய்துள்ளதாக ஆணைமடு பொலிஸார் தெரிவித்தனர்.

ஆணைமடு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆண்டிகம தளுவேகம எனும் பிரதேசத்தை சேர்ந்த சிறுமியே இவ்வாறு கடத்தி செல்லப்பட்டவர் எனவும் பொலிஸார் கூறினர்.

கடத்தப்பட்ட சிறுமியின் தாய் வெளிநாட்டில் வீட்டுப் பணிப்பெண்ணாகத் தொழில் புரிந்து வருவதாகவும், குறித்த சிறுமி தனது பாட்டியின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளதாகவும் தெரியவருகிறது.

இந்நிலையில் கடந்த பத்து தினங்களாக தனது பராமரிப்பில் இருந்த தனது பேத்தியைக் காணவில்லை என சிறுமியின் பாட்டி ஆணைமடு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட ஆணைமடு பொலிஸார் சிலாபம் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் குறித்த சிறுமியுடன் இருந்த சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர். 

சந்தேக நபரான இளைஞருடன் தான் காதல் தொடர்பினை கொண்டிருந்ததாகவும் தனது வீட்டில் ஒருவரும் இல்லாத சமயத்தில் ஒரு நாள் முதற்தடவையாக தனது காதலர் தன்னை வல்லுறவுக்கு உட்படுத்தியதாகவும் பொலிஸாரிடம் சிறுமி கூறியுள்ளார்.

அதன் பின்னர் சந்தேக நபரான தனது காதலரின் வேண்டுகோளுக்கு அமைய அவருடன் வீட்டை விட்டுச் சென்றதாகவும், வீட்டைவிட்டுச் சென்றதிலிருந்து தாமிருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

வைத்திய பரிசோதனைக்காக குறித்த சிறுமி, ஆணைமடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த ஆணைமடு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X