2025 மே 09, வெள்ளிக்கிழமை

கசிப்பு விவகாரம்: குற்ற ஒழிப்பு பிரிவினர் மீது தாக்குதல்

Thipaan   / 2014 ஒக்டோபர் 08 , பி.ப. 01:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

சட்டவிரோதமாக கசிப்பு விற்பனை செய்யும் இடம்மொன்றை முற்றுகையிடச் சென்ற புத்தளம் பிரிவின் குற்ற ஒழிப்பு பிரிவினர் மீது இன்று (08) காலை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மதுரங்குளி ஜயசிரிகம எனுமிடத்தில் வைத்தே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குற்ற ஒழிப்பு பிரிவின் பொறுப்பதிகாரி சிறு காயத்துக்குள்ளாகியதோடு, மற்றொரு பொலிஸ் கான்ஸ்டபிள் காயங்களுடன் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜயசிரிகம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சட்டவிரோத கசிப்பு விற்பனை நிலையத்தை புத்தளம் குற்ற ஒழிப்பு பிரிவினர் இன்று காலை முற்றுகையிட்டுள்ளனர்.

இதன் போது கசிப்பு விற்பனையில் ஈடுபடும் பெண் ஒருவரின் மகள் குற்ற ஒழிப்பு பிரிவின் பொறுப்பதிகாரியின் கையைக் கடித்து காயப்;படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

இதேவேளை, அவ்விடத்துக்;கு மோட்டார் சைக்கிளில் வந்துள்ள ஒருவர் அங்கு சுற்றிவளைப்பில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை மோட்டார் சைக்கிளால் மோதிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இதில் காயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் முந்தல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அங்கிருந்து புத்தளம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இவர் மீது மோட்டார் சைக்கிளால் மோதிவிட்டுச் சென்றவர் கசிப்பு விற்பனையில் ஈடுபடும் பெண்ணின் மகன் என அடையாளம் கண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தையடுத்து சட்டவிரோத கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட பெண்ணையும் அப்பெண்ணின் மகளான குற்ற ஒழிப்பு பிரிவின் பொறுப்பதிகாரியின் கைகைக் கடித்த 25 வயது யுவதியையும் கைது செய்துள்ள குற்ற ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் அவ்விருவரையும் மேலதிக நடவடிக்கைகளுக்காக முந்தல் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

பொலிஸ் கான்ஸ்டபிளை மோதிவிட்டுத் தப்பிச் சென்ற நபரைக் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ள முந்தல் பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X