2025 ஜூலை 17, வியாழக்கிழமை

ஒரே நாளில் மின்சார வசதியை பெற்றுகொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்

Kogilavani   / 2015 ஜனவரி 26 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர், எம்.என்.எம்.ஹிஜாஸ்


வீடுகளுக்கோ அல்லது வேறு கட்டடங்களுக்கோ மின்சார வசதியைப் பெற்றுக்கொள்வதற்கான ஒரேநாள் சேவை, எதிர்வரும் இரு வாரங்களில் அறிமுகப்படுத்த உள்ளதாக மின்சக்தி எரிபொருள் துறை இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.


இதன்மூலம் பயனாளர்கள் இதுவரை காலமும் மின்சார வசதியைப் பெற்றுக் கொள்வதற்காக அனுபவித்த அசௌகரியங்கள் முற்றாக நீக்கப்பட்டு தமது தேவையை எதுவித தாமதமுமின்றி மிக விரைவாகவும் அதேநேரம் ஒரே தினத்திலேயேயும் பெற்றுக்கொள்ளும் வசதியைப் பெறுவார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.


புத்;தளம் தேத்தாபொல பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை, மின்விநியோகத் திட்டம் ஒன்றை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,


இத்திட்டம் சுதந்திர தினத்தின் பின்னர் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. மின்வசதி தேவைப்படுபவர்கள், அதற்காக வழங்கப்படும் தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பை மேற்கொண்டு தகவலை வழங்க வேண்டும். அதன் பின்னர் அன்றைய தினத்துக்குள்; குறித்த இடத்துக்கு வரும் மின்சார சபை அதிகாரிகள் அதற்கான கட்டணங்களை அவ்விடத்திலேயே பெற்றுக்கொண்டு குறித்த இடத்துக்குறிய மின்சார வசதியை வழங்குவார்கள்.


இத்திட்டத்தின் ஊடாக மக்கள் தமது தேவையை ஒரே தினத்திலேயே பெற்றுக் கொள்ளும் வாய்ப்பை பெறுவார்கள். அவர்களுக்கு எந்தவித அலைச்சலுமில்லை. விண்ணப்பங்கள் நிரப்பும் தேவையுமில்லை. அதிகாரிகளைத் தேடித்திரியவும் வேண்டியதில்லை.


புதிய அரசாங்கம் மேற்கொண்டு வரும் 100 நாள் துரித வேலைத்திட்டத்தின் கீழ் நூறு தினங்கள் முடிவடைய முன்னர் வடமேல் மாகாணத்தின் புத்தளம் மற்றும் குருநாகல் மாவட்டங்களில் சகல பிரதேசங்களுக்கும் மின்சாரம் வழங்கப்படும்.  


அதற்கான பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நூறுநாட்கள் முடிவடைந்ததும் வடமேல் மாகாணத்தில் மின்சாரம் இல்லாத வீடுகள் இருக்காது. தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை துரிதகதியில் நிறைவேற்றுவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.


நாம் பதவியேற்று இருவாரங்களுக்குள் எரிபொருள் விலையை குறைத்துள்ளோம்.


எமது அமைச்சின் ஊடாக இன்னும் பல சலுகைகளை மக்களுக்கு வழங்க உள்ளோம். மின் கட்டணங்களைக் குறைப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது' என்று அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X