2025 மே 07, புதன்கிழமை

பத்து வருடங்களுக்கு முன்னர் கொலை :சந்தேக நபர்கள் கைது

Sudharshini   / 2015 மே 04 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். எஸ். முஸப்பிர்

பத்து வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் நால்வரை சந்தேகத்தின் பேரில் ஞாயிற்றுக்கிழமை (03) கைது செய்துள்ளதாக சிலாபம் பிரிவின் தீர்க்கப்படாத குற்றங்களின் விசாரணைப் பிரிவினர் தெரிவித்தனர்.  

2005ஆம் ஆண்டு ஒக்டோபர் 10ஆம் திகதி, குளியாப்பிட்டி இலுக்கேன பிரதேசத்தைச் சேர்ந்த அப்புக்குட்டி தேவகே லலன்த என்ற 22 வயது இளைஞர், கொஸ்வத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீகஹவெல பிரதேசத்தில் வசிக்கும் தனது உறவினர் வீட்டுக்கு சென்றிருந்த போது கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.

குறித்த இளைஞரின் சடலம், மாரவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இஹல கட்டுனேரி பிரதேசத்திலிருந்து பொலிஸாரினால் மீட்கப்பட்டிருந்தது.

இக்கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வந்த விசாரணைகளின் பின்னர், கொஸ்வத்தைப் பொலிஸ் நிலையத்தில்  பணியாற்றிய வந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உட்பட பொலிஸார் ஐவர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பணியிலிருந்தும் இடைநிறுத்தப்பட்டனர்.

இந்நிலையில், இக்கொலையினை வேறொரு தரப்பினரே செய்துள்ளனர் என்ற தகவல் கிடைத்ததையடுத்து பொலிஸார் விசாரணைகளைத் தீவிரப்படுத்தினர்.

இதனையடுத்தே வென்னப்புவ, சிரிகம்பல பிரதேசத்தைச் சேர்ந்த நால்வரை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளனர்.

இக்கொலைச் சம்பவம் தவறுதலாக இடம்பெற்றது எனவும் வேறு நபர் ஒருவரைக் கொலை செய்யவே தமக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டிருந்ததாகவும் ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக கொஸ்வத்தைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சிலாபம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பாலித சிரிவர்தனவின் ஆலோசனை மற்றும் நேரடி மேற்பார்வையில்  சிலாபம் பிரிவின் தீர்க்கப்படாத குற்றங்களின் விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் அருண சாந்த தலைமையிலான குழுவினர் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X