2025 மே 07, புதன்கிழமை

இரண்டரை வயது குழந்தையை கொலை செய்தவருக்கு மரண தண்டனை

Princiya Dixci   / 2015 மே 21 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். எஸ். முஸப்பிர்

வென்னப்புவ, ரங்கமுள்ள பிரதேசத்திலுள்ள ஜின் கங்கையினுள் இரண்டரை வயது குழந்தையை வீசி கொலை செய்த சம்பவத்தில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட நபருக்கு சிலாபம் மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரவீந்திர ரணராஜா இன்று வியாழக்கிழமை (21) மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

சீதுவை, துமமுள்ள பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான இளைஞர் ஒருவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2009ஆம் ஆண்டு ஜுன் மாதம் இரண்டரை வயது குழந்தையைக் கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் இவ்வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதையடுத்து குற்றம் சுமத்தப்பட்டவர் தான் நிரபராதி எனத் தெரிவித்ததையடுத்து வழக்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

உயிரிழந்த குழந்தையின் தாய்க்கும் தந்தைக்குமிடையில் தகராறு இடம்பெற்று வந்துள்ளது. இந்தக் காலப் பகுதியில் உயிரிழந்த குழந்தையின் தாய், களனி பிரதேச பாடசாலை ஒன்றில் முகாமைத்துவ உதவியாளராகப் பணியாற்றி வந்துள்ளார்.

இச்சந்தர்ப்பத்தில், லொறிச் சாரதியாகப் பணியாற்றி வந்த மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர், குழந்தையின் தாயுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டிருந்துள்ள நிலையில் குழந்தையின் தாய் மாற்றம் பெற்று வென்னப்புவ பிரதேச பாடசாலை ஒன்றுக்கு வந்து அங்கு வீடொன்றில் குடியேறியிருந்துள்ளனர். குறித்த குழந்தை, குழந்தைகள் காப்பகம் ஒன்றில் சேர்க்கப்பட்டிருந்துள்ளது.

இந்நிலையில் சம்பவ தினம் அந்த குழந்தைகள் காப்பகத்துக்கு சென்றுள்ள மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நபர், குழந்தையை அழைத்துச் சென்று வென்னப்புவ, ஜின் கங்கையில் போட்டுவிட்டுச் சென்றிருந்த நிலையில் பொலிஸார் கண்டெடுத்துள்ளமை விசாரணைகளின் மூலம் தெளிவாகியது.

குற்றவாளி தான் நிரபராதி என நீதிமன்றத்தில் தெரிவித்த போதும் தெரிவிக்கப்பட்ட சாட்சிகளின் மூலம் இக்கொலையினை அவரே செய்தார் என உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து அவருக்கு சிலாபம் மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரவீந்திர ரணராஜா இன்று மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X