2025 மே 07, புதன்கிழமை

குழந்தையை கிணற்றில் வீசி கொன்ற தந்தைக்கு மரண தண்டனை

Menaka Mookandi   / 2015 மே 28 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

ஒரு வயதும் இரண்டு மாதமும் கொண்ட தனது மகனை கிணறுக்குள் வீசி படுகொலை செய்த தந்தையொருவருக்கு மரண தண்டனை விதித்த சிலாபம் மேல் நீதிமன்றம், அக்குழந்தையின் தாயை விடுவிக்குமாறு நேற்று புதன்கிழமை உத்தரவிட்டது.

ஒன்றினுள் போட்டு கொலை செய்த குற்றச்சாட்டு தொடர்பில் குழந்தையின் பெற்றோருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை விசாரணை செய்த சிலாபம் மேல் நீதிமன்ற நீதிபதி ரவீந்திர அமல் ரணராஜா, குழந்தையின் தாயை விடுதலை செய்ததோடு, தந்தைக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.

நீர்கொழும்பு, பிட்டிப்பனை பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயது நபருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குழந்தையின் தாய், தங்கொட்டுவ, எட்டியாவல பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடையவராவார்.

இக்கொலைச் சம்பவம் தங்கொட்டுவ எட்டியாவல எனும் பிரதேசத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24ஆம் திகதி இடம்பெற்றது. சித்தும் கௌசல்ய என்ற குழந்தையே சம்பவத்தில் கொல்லப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மேற்படி படுகொலைச் சம்பவம் இடம்பெற்ற போது, மரண தண்டனைக்குரியவர் 17 வயதுடையவராகக் காணப்பட்டதுடன் குழந்தையின் தாய் திருமண வயதை அடையாத சிறுமியாகவும் காணப்பட்டுள்ளார். இருப்பினும், அவ்விருவரும் சட்டரீதியற்ற முறையில் ஒன்றாக குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில் இரு வருடங்களின் பின்னர் அவ்விருவருக்கும் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அக்குழந்தை அங்கவீனமுற்றிருந்ததால் குழந்தையின் பெற்றோருக்கிடையில் அடிக்கடி சண்டைகள் ஏற்பட்டுள்ளன. சம்பவ தினமும் இவ்வாறு இருவருக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதோடு குழந்தையின் தந்தை குழந்தையை எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.

பின்னர் அப்பிரதேச கிணறு ஒன்றினுள் குழந்தை ஒன்றின் சடலம் மிதப்பதாக அறியவந்து, அங்கு சென்று பார்த்தபோது மேற்படி தம்பதியின் குழந்தையே இவ்வாறு சடலமாகக் கிடந்துள்ளமை தெரியவந்துள்ளது. குழந்தையுடன் வீட்டைவிட்டு வெளியேறிய தந்தை குழந்தையை கிணற்றில் வீசியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அதுபற்றி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. இதன்பின்னர், அக்குழந்தையின் தந்தையும் தாயும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இந்த கொலை வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. சாட்சியங்களின் அடிப்படையில், குழந்தையின் தாய்க்கு இக்கொலையில் தொடர்பில்லை எனத் தெரியவந்ததால் அப்பெண்ணை வழக்கிலிருந்து விடுதலை செய்த சிலாபம் மேல்நீதிமன்ற நீதிபதி, குழந்தையின் தந்தைக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X