-எம்.என்.எம்.ஹிஜாஸ்
வடமேல் மாகாண சபையினால் 50 மில்லியன் ரூபா செலவில் 26 வீதிகளினை புணரமைப்பு செய்வதற்கான அனுமதியினை வட மேல் மாகாண சபை நேற்று செவ்வாய்கிழமை வழங்கியது.
2012ஆம் ஆண்டு இறுதியிலும், 2013ஆம் ஆண்டு ஆரம்பத்திலும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வடமேல் மாகாண சபைக்குட்பட்ட வீதிகளினை புணரமைக்க திறைசேரியினால் 50 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வடமேல் மாகாண சபையினால் மேற்கொள்ளப்படவுள்ள வீதி புணரமைப்பு தொடர்பாக விவாதம் நேற்று வடமேல் மாகாண சபைக்கூட்டத்தின் போது விவாததிற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன் போது உரையாற்றி மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சரும், முதலமைச்சருமான தயாசிறி ஜெயசேகர, திறைச்சேரியிடம் வடமேல் மாகாணத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீதிகளினை புணரமைப்பு செய்வதற்கு திறைசேரியிடம் 204 மில்லியன் ரூபா கோரப்பட்டிருந்த போதும் 50 மில்லியன் ரூபாவே வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் குருநாகல் மாவட்டத்தில் வெள்ளத்தினால் மிகவும் மோசமாக சேதமடைந்த வீதிகளினை புணரமைப்பு செய்வதற்கு 43 மில்லியன் ரூபாவும், புத்தளம் மாவட்டத்தில் சேதமடைந்த வீதிகளினை புணரமைக்க 7 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்நிதியின் மூலம் வடமேல் மாகாண சபைக்குட்பட்ட 26 மாகாண வீதிகள் புணரமைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், இவ் புணரமைப்பு பணிகள் இவ் வருடத்திற்குள் பூர்த்தி செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.
இவ் பிரேரணை 31 மேலதிக வாக்குகளினால் வடமேல் மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டது. ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆதரவாகவும் ஐக்கிய தேசிய கட்சி, ஜனநாயக கட்சி, ஜே.வி.பி. உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தனர்.