2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘இடம்பெயர்ந்த வாக்காளர்களைப் பதிவிலிருந்து நீக்குவதற்கு முடியாது’

Editorial   / 2020 செப்டெம்பர் 24 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளத்தில், கொத்தணி வாக்குச் சாவடிகளில் வாக்களித்த மன்னார் மாவட்ட மக்களின் பெயர்களை, மன்னார் வாக்காளர் இடாப்பிலிருந்து நீக்குவதற்கு, உதவித் தேர்தல் ஆணையாளருக்கு எவ்வித அதிகாரங்களும் வழங்கப்படவில்லை என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்ததாக, மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

தேர்தல் ஆணையகத்தில் இது தொடர்பான முறையீட்டுக் கடிதத்தை நேற்று (23) கையளித்த போதே, ஆணைக்குழு உறுப்பினர்கள், ரிஷாட் பதியுதீனிடம் இதனைத் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த ரிஷாட் எம்.பி கூறியதாவது, "1990ஆம் ஆண்டு வட மாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களில் ஒரு பகுதியினர், புத்தளம் மாவட்டத்தில் தமது வாக்குகளைப் பதிவு செய்துவிட்டனர். அமைதி திரும்பிய பின்னர் ஒருசாரார் வடக்கில் உள்ள தமது சொந்த இடங்களுக்குத் திரும்பி, மீண்டும் அங்கு வாக்காளர் பதிவை மேற்கொண்டிருக்கின்றனர்.

“மீள்குடியேற்றத்துக்கென மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு சென்றவர்கள், தமது பிரதேசங்களில் வாழ்வதற்கான அடிப்படை வசதிகள் இல்லாமையால் மீண்டும் புத்தளத்துக்கு திரும்பியுள்ளனர்.

“எனினும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது, இவர்களுக்கென கொத்தணி வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, வாக்களிக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

“இவ்வாறான நிலையில், கொத்தணி வாக்குச்சாவடி வாக்காளர்களை, மன்னார் மாவட்டப் பதிவிலிருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகளை, கிராம சேவகர் ஊடாக முன்னெடுப்பதற்கு, உதவித் தேர்தல் ஆணையாளர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

“தேர்தல் சட்ட விதிகளின் படி, ஒரு நபர் தனது வாக்கை எங்கு பதிய வேண்டும் என்பதை முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கே உரித்தானது. நபரொருவருக்கு இரண்டு வீடுகள் இருந்தாலும், எந்த வீட்டு விலாசத்தில் தமது வாக்கைப் பதிய வேண்டும் என்பதை அந்த வாக்காளர்தான் தீர்மானிக்க வேண்டும். இதனை ஏற்றுக்கொள்வதா, இல்லையா என்பதை முடிவு செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு மாத்திரமே உள்ளது.

“தேர்தல் ஆணைக்குழு மேற்கொள்ள வேண்டிய தீர்மானம் ஒன்றை உதவித் தேர்தல் ஆணையாளரோ, கிராம சேவகரோ செய்ய முடியாது. எனவே, வாக்காளர்கள் தமது விருப்புக்கேற்ப, அவர்களது பதிவுகளை மேற்கொள்வதற்கு உதவித் தேர்தல் ஆணையாளர் இடமளிக்க வேண்டும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .