2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

முஸ்லிம்களின் ஜனாஸா நல்லடக்கம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

Editorial   / 2020 மார்ச் 31 , பி.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எம்.யூ.எம். சனூன் 

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்று (30) உயிரிழந்த இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவரின் ஜனாஸா எரியூட்டப்பட்டமைக்கு சிலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இவ்விடயம் தொடர்பில் தெளிவுபடுத்தி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பத்வாக் குழு செயலாளர் அஷ்ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ், முக்கிய அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிவித்தலில், மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,  

'முஸ்லிமான ஒருவர் மரணித்தால், அவரைக் குளிப்பாட்டுவது, கபன் செய்வது, தொழுகை நடத்துவது , அடக்கம் செய்வது முஸ்லிம்கள் மீது பர்ளு கிபாயாவாகும். பர்ளு கிபாயா என்பது, இவற்றை முஸ்லிம்களில் சிலர் நிறைவேற்றி விட்டால் போதுமானது. அவ்வாறு யாரும், அக்கடமைகளை நிறைவேற்றாவிட்டால், முஸ்லிம்கள் அனைவரும் பாவிகளாக ஆகிவிடுவார்கள்' என குறிப்பிட்டுள்ளார்.

'அவ்வாறே, தொழுகை நடத்துவதற்கு முன் ஜனாஸா குளிப்பாட்டப்பட்டிருப்பது அவசியமாகும். நீரில் மூழ்கி அல்லது இடிபாடுகளுக்குள் சிக்குண்டு ஒருவர் மரணித்து, அவரது ஜனாஸா கிடைக்கப் பெறாத சந்தர்ப்பங்களில், அதைக் குளிப்பாட்ட முடியாத இக்கட்டான சூழ்நிலை ஏற்படுகின்றது.  இந்நிலைகளில், தொழுகை நடத்த முடியுமா எனும் விடயத்தில், மார்க்க அறிஞர்களிடம் கருத்து வேறுபாடுகள் உள்ளன. பெரும்பான்மையான மார்க்க அறிஞர்கள், ஒரு ஜனாஸா மீது தொழுகை நடத்துவதற்கு குளிப்பாட்டல் நிபந்தனையாகும் என்பதால், குளிப்பாட்ட முடியாமலாகுமிடத்து, தொழுகை நடத்த முடியாது என்று கூறுகின்றனர்.

'என்றாலும், சில மார்க்க அறிஞர்கள், ஜனாஸாத் தொழுகையின் நோக்கம், மரணித்தவருக்கு துஆ செய்வதாகும். அவ்வாறே, ஜனாஸாவுடைய நான்கு கடமைகளில் சில கடமைகளை நிறைவேற்ற முடியாது என்பதால், நிறைவேற்ற முடியுமான கடமைகளை விட்டு விட முடியாது என்று கூறுகின்றனர். இதற்கு 'ஒரு காரியத்தில் இயலாத சில விடயங்களுக்காக இயலுமான விடயங்களையும் சேர்த்து விட்டுவிட முடியாது' எனும் அடிப்படையை ஆதாரமாகக் கூறுகின்றனர்.

'இவ்வடிப்படையில், கொரோனா வைரஸ் தாக்கி மரணித்த ஒருவரது உடலிலிருந்து மற்றவர்களுக்கு வைரஸ் பரவ வாய்ப்புள்ளது என்பதால், அவ்வாறு மரணிப்பவர்களின் உடல் முற்றுமுழுதாக பை ஒன்றினால் மூடப்படும். எனவே, அதைக் குளிப்பாட்ட அல்லது தயம்மும் செய்ய முடியாத நிலை ஏற்படும்.

இந்நிலையில், மேற்கூறப்பட்ட இரண்டாவது கருத்தின் அடிப்படையில், கொரோனா வைரஸ் தாக்கி மரணிக்கும் ஜனாஸாவை குளிப்பாட்ட முடியாது போனாலும், அதற்காக ஜனாஸாத்  தொழுகையை நடத்தி அடக்கம் செய்வது அவசியமாகும்.

'கொரோனா மூலம் மரணிக்கும் ஒருவரின் இறுதிக் கிரியைகள் விடயத்தில், அரசாங்கம் சில நடைமுறைகளைப் பிரகடனப்படுத்தியுள்ளது.

'அவற்றில், மரணித்தவரது ஜனாஸாவை குளிப்பாட்ட முடியாது, ஜனாஸாவை எரித்தல் வேண்டும், அடக்குவதாக இருந்தால், ஆறு அடிகள் ஆழமாக கப்ரு இருத்தல் வேண்டும், அரசாங்க அதிகாரிகள் முன்னிலையில் அடக்கம் செய்யப்படல் வேண்டும், மிகவும் நெருங்கிய ஒரு சில உறவினர்களே அடக்கம் செய்யப்படும் இடத்துக்கு அனுமதிக்கப்படல் வேண்டும், பிரத்தியேக இடத்தில் அடக்கம் செய்தல் வேண்டும் என்பன போன்ற அறிவுரைகள் உள்ளன.

'மேற்குறிப்பிட்ட மார்க்க சட்டத்தின் அடிப்படையில், மரணித்தவரின் உடலைக் குளிப்பாட்ட அல்லது தயம்மும் செய்ய முடியாது என்பதால் தொழுகை மாத்திரம் நடத்தி அரச அதிகாரிகளின் அறிவுரைகளுடன், அதிக நபர்கள் ஒன்று சேராமல், முக்கிய சிலர் மாத்திரம் ஒன்று சேர்ந்து ஜனாஸா தொழுகை, அடக்கும் பணிகளில் ஈடுபடுதல் வேண்டும். மற்றவர்கள் இவ்வாறான நிர்ப்பந்த நிலையில் மறைமுக ஜனாஸாத் தொழுகையை தொழுது கொள்ள மார்க்கத்தில் அனுமதியுள்ளது' எனக் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .