2025 மே 15, வியாழக்கிழமை

விசேட கலந்துரையாடல்

Princiya Dixci   / 2016 மே 05 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் நகரில் வதியும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறுபட்ட பிரச்சினைகள் தொடர்பாக புத்தளம் வலயக் கல்விப் பணிப்பாளர் டபிள்யூ.பீ.கே.எஸ். விஜேசிங்கவுக்கும் புத்தளம் தமிழர் பேரவை அங்கத்தவர்களுக்குமிடையிலான விசேட கலந்துரையாடல், புத்தளம் வலயக் கல்விப் பணிமனையில் நேற்று புதன்கிழமை (04) மாலை நடைபெற்றது. 

புத்தளம் தமிழர் பேரவை சார்பாக அதன் தலைவர் வீ. சண்முகவேல், செயலாளர் என். கோபிலன், உறுப்பினர்களான புத்தளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பிரதம குரு வெங்கட சுந்தாராம குருக்கள், ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத் தலைவர் ஏ. செல்வராஜா, புத்தளம் எம்.ஜி.ஆர். மன்றத்தலைவர் கே.செல்வராஜா மற்றும் புத்தளம் இந்து மகா சபையின் செயலாளர் சுரேன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்தக் கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் தொடர்பாக அதன் தலைவர் வீ. சண்முகவேல் தகவல் தருகையில்,  புத்தளம் நகரில் வதியும் தமிழ் மக்கள் கடந்த ஐந்து வருடங்களாக சகல விடயங்களிலும் குறிப்பாக கல்வி, தொழில் வாய்ப்புகள் மற்றும் வளப்பங்கீடு போன்றவற்றில் அரசியல் அனாதைகளாக பெரும்பான்மை இனத்தவர்களினால் சுரண்டப்பட்டு வருகின்றனர்.  

குறிப்பாக கல்வித்துறையில் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்தல் மற்றும் பாடசாலைகளில் சாதாரண ஊழியர் நியமனங்களில் கூட தமிழ் மக்கள் பாரிய முறையில் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். 

இதற்கு மகுடம் சூடுவது போல கல்பிட்டி வீதி நாயக்கர் சேனை இந்து தமிழ் வித்தியாலயத்துக்கு சகோதர இன அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

புத்தளம் நகரில் இந்து மற்றும் கத்தோலிக்க அதிபர் சேவை உடையவர்கள் இருந்தும் அவர்களுக்கு இந்தப் பதவி வழங்கப்படாமை கவலையளிக்கக் கூடிய விடயமாக அமைந்துள்ளது. இதேநிலை புத்தளம் மணல்தீவு தமிழ் ரோமன் கத்தோலிக்க பாடசாலை உள்ளிட்ட பல பாடசாலைகளில் நிகழ்ந்துள்ளன. 

இதனை வன்மையாகக் கண்டிப்பதோடு, எதிர்வரும் காலத்தில் இத்தகைய நடைமுறைகள் மாற்றப்பட்டு விகிதாசார முறையில் வளப்பங்கீடு மற்றும் நியமனங்கள் போன்றன வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கைகளை வலயக் கல்விப் பணிப்பாளருக்கு முன் வைத்துள்ளதாகத் தெரிவித்தார்.

தமது கோரிக்கைகளை வலயக் கல்விப் பணிப்பாளர் ஏற்றுக்கொண்டதாகவும் தமிழர் பேரவை தலைவர் வீ. சண்முகவேல் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .