2025 மே 01, வியாழக்கிழமை

வெளிநாடுகளில் வதியும் இலங்கையர்கள் மீள குடியேற விரும்புகின்றனர்: நரேஷ்

A.P.Mathan   / 2013 செப்டெம்பர் 06 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


- ச.சேகர்
 
இலங்கையின் ஏற்றுமதி மூலம் நாட்டுக்கு வருமானமீட்டும் பாரம்பரிய உற்பத்திகளாக விவசாயத்துறை சார்ந்த தேயிலை, இறப்பர் போன்றன அமைந்துள்ளன. வரலாற்று ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த உற்பத்திகளை சுமார் 2 தசாப்த காலத்துக்கு முன்னர் விஞ்சும் வகையில் ஆடைத்தொழில்துறை முன்னோடியாக திகழத்தொடங்கியது. இன்றைய நவீன கால கட்டத்தில் தொழில்நுட்பத்துறை வளர்ச்சி கண்டுவரும் நிலையில், இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தில் குறிப்பிடத்தக்களவு பங்களிப்பை வழங்கும் ஒரு துறையாக தகவல்தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக BPO துறை வளர்ச்சியடைந்து வருகிறது. இந்த துறையில் இலங்கையில் தனது செயற்பாடுகளை வெற்றிகரமாக முன்னெடுக்கும் நிறுவனமாக வேர்டுசா இயங்கி வருகிறது. 
 
ஆரம்பத்தில் வாகன தரிப்பிடமொன்றில் மிகவும் சிறியளவில் தனது செயற்பாடுகளை ஆரம்பித்த வேர்டுசா, இன்று உலகளாவிய ரீதியில் ஃபோர்ப்ஸ் தரப்படுத்தலில் உள்வாங்கப்பட்ட உலகின் முன்னணி தகவல் தொழில்நுட்ப தீர்வுகளை வழங்கும் நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்த நிறுவனத்தின் இலங்கையின் செயற்பாடுகள் குறித்து நிறுவனத்தின் உப தலைமை அதிகாரியான நரேஷ் சுப்ரமணியம் - தமிழ் மிரருக்கு வழங்கிய விசேட செவ்வியில்,
 
'இலங்கையில் தனது வர்த்தக செயற்பாடுகளை, வேர்டுசா 1996ஆம் ஆண்டு ஆரம்பித்தது. வேர்டுசா - ஐக்கிய அமெரிக்காவை தலைமையகமாக கொண்டு இயங்கும் நிறுவனமாகும். அமெரிக்கா, பிரித்தானியா, சிங்கப்பூர், ஜேர்மனி, மலேசியா, நெதர்லாந்து, இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் தனது சேவை நிலையங்களை கொண்டுள்ளது. தனது முதலாவது வெளிக்கள அபிவிருத்தி சேவை நிலையத்தை இலங்கையில் வேர்டுசா நிறுவியிருந்தது. 
 
தற்போது கொழும்பிலுள்ள காரியாலயத்தில் சுமார் 2000 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். எமது நோக்கம், 2015ஆம் ஆண்டளவில் இந்த எண்ணிக்கையை 5000 ஆக உயர்த்துவதாகும். இலங்கை செயற்பாடுகளை பொறுத்தமட்டில் மூன்று விதமான முக்கிய வர்த்தக செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதில் பிரதானமாக மென்பொருள் அபிவிருத்தி பணிகளை குறிப்பிட முடியும். அதுபோன்று ஆப்ளிகேஷன் உதவிகள் - தொழில்நுட்ப உதவிகள் செயற்பாடுகளும் மற்றும் மொபைல் ஆப்ஸ் அபிவிருத்தி செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன. வங்கியியல் துறைசார்ந்த நிறுவனங்களுக்கு தீர்வுகளை வழங்கிவருவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
 
உலகளாவிய ரீதியில் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்களுடன் பணியாற்றுவது எமது ஊழியர்களுக்கு பரந்த தொழில்சார் உறவுகள் அனுபவத்தை வழங்கியுள்ளது. தொடர்பாடல் திறன் என்பது எமது தொழிலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. பெருமளவான சந்தர்ப்பங்களில் வாடிக்கையாளர்களின் தேவைகள் எமக்கு முகத்துக்கு முகம் நேரடியாக விளக்கமளிக்கப்படுவதில்லை. மாறாக மின்னஞ்சல் மூலமாக அல்லது தொலைபேசி அழைப்புகளின் ஊடாகவே பெருமளவு விளக்கங்கள் மற்றும் தெளிவுபடுத்தல்கள் பரிமாறிக்கொள்ளப்படுகின்றன. எமது தொழில் வாய்ப்புகளை பொறுத்தமட்டில் புதிதாக நிறுவனத்துடன் இணைந்து கொள்பவர்களுக்கு 3 மாத காலப்பகுதிக்கு தொழிற்பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. அதன் பின்னர் அவர்களுக்கு தமது எதிர்காலத்தில் பெற்றுக் கொள்ளக்கூடிய பதவியுயர்வுகள் குறித்த வழிகாட்டல்கள் போன்றனவும் தெளிவாக விளக்கப்படுகின்றன. எமது நிறுவனத்துடன் இணைந்து கொள்வதன் மூலம் தமது எதிர்காலம் குறித்து ஊழியர்கள் எவ்விதமான அச்சத்தையும் கொள்ளத்தேவையில்லை. நாம் எமது ஊழியர்களின் திறமைக்கேற்ப புலமைப்பரிசில் திட்டங்களையும் வழங்கி வருகிறோம். 
 
சரியான ஊழியர்களை இனங்கண்டு கொள்ளவும், எமது தொழில்சூழ்நிலைக்கு ஏற்ப அவர்களை ஆரம்பத்திலிருந்தே தயார்ப்படுத்தும் வகையிலும், நாம் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகிறோம்.
தொழில்நடவடிக்கைகள், எமது ஊழியர்களை தயார்ப்படுத்துவதில் மட்டும் நாம் எமது முழுக்கவனத்தையும் செலுத்தாமல், நாம் இயங்கும் சமூகங்களில் எமது அக்கறையை வெளிப்படுத்தும் வகையில், சமூக பொறுப்புணர்வு திட்டங்களையும் 4 பிரிவுகளில் முன்னெடுத்து வருகிறோம். 
 
பல்கலைக்கழக மாணவர்களை தொழில்நுட்பம் சென்றடையக்கூடிய வழிமுறைகளை ஏற்படுத்துவது, பல்கலைக்கழக மாணவர்களை சென்றடைந்து அவர்களுக்கு தமது எதிர்காலம் குறித்த வழிகாட்டல்களை வழங்குவது, 'அகுர' எனும் தொழில்நுட்ப கல்விசார் நடவடிக்கை, 'சஹன' எனும் அனர்த்த முகாமைத்துவ கட்டமைப்பு மற்றும் சூழல் பாதுகாப்பு செயற்பாடுகள் போன்றன இதில் உள்ளடங்குகின்றன. இலங்கையில் தற்போது யுத்தம் நிறைவடைந்து, அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் நிலையில், வெளிநாடுகளில் வதியும், இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து சென்ற நிபுணர்கள், மீண்டும் இலங்கைக்கு வந்து தொழில்வாய்ப்புகளை பெற்றுக் கொள்வதில் ஆர்வமாக உள்ளனர். எமது நிறுவனத்துடன் இணைந்து கொள்வதற்கு இவ்வாறு பலர் வெளிநாடுகளிலிருந்தும் தமது விண்ணப்பங்களை சமர்ப்பித்த வண்ணமுள்ளனர். இது ஒரு சிறந்த சூழலாகும். 
 
இலங்கையை பொறுத்தமட்டில் எமது நிறுவனம் போன்ற தகவல்தொழில்நுட்பம் மற்றும் BPO செயற்பாடுகளை முன்னெடுக்கும் நிறுவனங்களில் பெரும்பாலும் இளைஞர், யுவதிகள் அதிகளவில்
பணியாற்றி வருகின்றனர். இந்த நிறுவனங்களில் பெரும்பாலும் வெளிநாட்டு கலாசார முறை பின்பற்றப்படுகின்றமையின் காரணமாக இவர்களின் பெற்றோர்கள் மற்றும் முதிர்வடைந்த பருவத்தில் உள்ளவர்கள் மத்தியில் இந்த தொழில்நிலையங்கள் குறித்து தவறான ஓர் எண்ணக்கரு காணப்படுகிறது. 
 
ஆனாலும், என்னைப் பொறுத்தமட்டில், ஒருவர் தவறான வழியை தெரிந்தெடுப்பதும், சரியான வழியை தெரிந்தெடுப்பதும், குறித்த நபரையே சாரும். இந்த நிலை வேறெந்த நிறுவனத்திலும் ஏற்படலாம். இலங்கையில் பெண்கள் தொழில் நிலை குறித்த அரச விதிமுறைகள் மிகவும் கடுமையானதாக அமைந்துள்ளன. இரவு வேளைகளில் பெண்களை பணிக்கமர்த்துவது தொடர்பாகவும், அவர்களுக்கு போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பாகவும் முறையான நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. கடந்த ஆண்டுக்கான NCE ஏற்றுமதியாளர் விருதுகள் வழங்கும் நிகழ்வில் பொருளாதாரத்தில் எமது நிறுவனத்தின் பங்களிப்பை கௌரவித்து விருது வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
 
பொதுவாக தகவல் தொழில்நுட்பத்துறையை சேர்ந்த நிறுவனமொன்று பாரியளவில் தனது செயற்பாடுகளை ஆரம்பிக்கும் போது, அதனையண்டியுள்ள வர்த்தக நிறுவனங்களுக்கும் தமது வியாபார நடவடிக்கைகளை விஸ்தரித்துக் கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படுகிறது. இதன் மூலம் நாம் இயங்கும் சமூகத்தின் வளர்ச்சியிலும் எம்மால் பங்களிப்பு வழங்கப்படுகிறது என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .