2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

மூலிகைக்கு மவுசு அதிகம்: சமந்த குமாரசிங்ஹ

A.P.Mathan   / 2014 டிசெம்பர் 24 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


நேர்காணல்: ச.சேகர்


'இயற்கையின் இரகசியம்' என்பதை கொண்டு நாம் அனைவரும் எமது இயற்கை அழகை மெருகேற்றிக் கொள்ள விரும்புவது வழமை. அந்த வகையில் இலங்கையில் முழுமையாக தயாரிக்கப்படும் இயற்கை அழகுசாதன தயாரிப்பு நாமமான நேச்சர்ஸ் சீக்ரட் நாமத்தின் உரிமையை கொண்டுள்ள புகழ்பெற்ற நிறுவனமான நேச்சர்ஸ் பியுட்டி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தலைவரும் முகாமைத்துவ பணிப்பாளருமான சமந்த குமாரசிங்ஹ அவர்களுடன் சந்திப்பொன்றை மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைந்திருந்தது.

இலங்கையில் தமது வர்த்தக செயற்பாடுகள், உலகளாவிய ரீதியில் ஒப்பிடும் போது இலங்கையில் இயற்கை வாசனை திரவியங்கள், அழகுசாதனப்பொருட்கள் போன்றவற்றுக்கான கேள்வி, அழகுசாதனப் பொருட்கள் உற்பத்தி விற்பனை துறையில் தமது நிறுவனத்தின் பிரவேசம், கம்பனியால் முன்னெடுக்கப்படும் புதிய திட்டங்கள் குறித்த விடயங்களை எம்முடன் சமந்த பகிர்ந்து கொண்டார்.

இந்த வியாபாரத்தை பொறுத்தமட்டில் முதல் முதலாக 2001 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இதற்கு முன்னர் நான் 11 வருடங்கள் இரசாயனப் பதார்த்தங்கள் உற்பத்தி துறையில் ஈடுபட்டிருந்ததை தொடர்ந்து, 1993 ஆம் ஆண்டு முதல் சுயதொழில் முயற்சியாளராக வியாபார நடவடிக்கைளில் ஈடுபட்டிருந்தேன். 2001 இல், இந்த வர்த்தக செயற்பாடுகளை ஆரம்பிக்கும் முன்னர், இந்த வர்த்தக செயற்பாடுகளுக்கு காணப்படும் வாய்ப்புகளைப் பற்றி நாம் ஆய்வுகளையும், பரிசோதனைகளையும் மேற்கொண்டிருந்தோம். குறித்த பரிசோதனைகள் இலங்கையில் இந்த இயற்கை தயாரிப்புகளாலான அழகு சாதனப் பொருட்களுக்கான வியாபாரத்தை ஆரம்பிப்பதற்கு சிறந்த சூழல் காணப்படுவதை எடுத்துக்காட்டியிருந்தது. 

இதனைத்தொடர்ந்து ஆரம்பத்தில் நாம் சிறியளவில் எமது வர்த்தக செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தோம். முதற்கட்டமாக நாம் 25 தயாரிப்புகளை சந்தையில் அறிமுகம் செய்திருந்தோம். அந்த கால கட்டத்தில், உள்நாட்டு தயாரிப்புகள் குறைவாகவே காணப்பட்டன. வெளிநாட்டு தயாரிப்புகளுடன் எமக்கு போட்டி காணப்பட்டது. ஆயினும் நாம் உயர் தரம் என்பதற்கு முக்கியத்துவம் வழங்கி, எமது தயாரிப்புகளுக்கென சந்தையில் ஒரு தனி உயர் இடத்தையும், வாடிக்கையாளர்களையும் பெற்றுக் கொண்டோம். படிப்படியாக காலப்போக்கில் எமது உற்பத்திகளுக்கு சிறந்த கேள்வி சந்தையில் காணப்பட்டது. எமது தயாரிப்புகளை பொறுத்தமட்டில் இதில் உள்நாட்டு மூலிகைகள் உள்ளடங்கியுள்ளதுடன், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அழகுசாதன சேர்மானங்கள் உள்ளடங்கியுள்ளன. 

இவ்வாறு 2004ஆம் ஆண்டளவில் மூலிகை அழகுசாதன பொருட்கள் வரிசையில், சந்தையில் நாம் முன்னிலையாளர்களாக தெரிவாகியிருந்தோம். இதனைத்தொடர்ந்து, எமது உற்பத்தி தொழிற்சாலையை மில்லேவ பகுதியில் நாம் 2007 ஆம் ஆண்டு நிறுவியிருந்தோம். ஐரோப்பிய முறைக்கமைவாக சகல ஆய்வு கூட வசதிகளையும் இந்த உற்பத்தி தொழிற்சாலை கொண்டுள்ளது. 13 ஏக்கர் நிலப்பரப்பில் சகல மூலிகை செடிகள், மரங்கள் சூழ்ந்த பகுதியில் நாம் எமது தொழிற்சாலையை நிர்மாணித்திருந்தோம். இந்த பகுதியை எவரும் பார்வையிடக்கூடிய வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் போன்றவர்கள் கல்விச் சுற்றுலா போன்று வருகை தந்து, எமது உற்பத்தி செயற்பாடுகளை பார்வையிட முடியும் என்றார். 

இலங்கையை பொறுத்தமட்டில் மூலிகை அழகுசாதன பொருட்களுக்கு அதிகளவு கேள்வி காணப்படுகிறது. மக்கள் மூலிகை அழகு சாதனப் பொருட்களைத் தான் அதிகளவு நாடுகின்றனர். எமது தயாரிப்புகள் உயர்ந்த தரத்தில் அமைந்துள்ளன. இந்த துறை வேகமாக வளர்ந்து வருகிறது. உள்நாட்டு காலநிலை மற்றும் சருமத் தன்மைகளுக்கு ஏற்ற வகையில் எமது தயாரிப்புகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இலங்கையை பொறுத்தமட்டில் அழகுசாதன பொருட்களை உற்பத்தி செய்து விநியோகிப்பதில் நாம் சந்தை முன்னோடிகளாக திகழ்கிறோம். 

கடந்த பத்து ஆண்டு காலப்பகுதியினுள் இலங்கையில் இந்த அழகுசாதனப் பொருட்கள் உற்பத்தி மற்றும் விநியோக செயற்பாடுகளில் ஈடுபடும் 30 – 40 புதிய நிறுவனங்கள் தோற்றம் பெற்றுள்ளன. 
நாம் முதன் முதலாக ஃபேஸ் வொஷ் தயாரிப்புகளை சந்தையில் அறிமுகம் செய்திருந்தோம். இவை தற்போது சந்தையில் 50 வீதத்துக்கும் அதிகமான சந்தை வாய்ப்பை கொண்டுள்ளன.
எமது தயாரிப்புகள் வரிசையில் நாம் லோசன் வகைகளை அடுத்ததாக அறிமுகம் செய்திருந்தோம். முற்றிலும் இயற்கை எண்ணெய் வகைகளை கொண்டு தயாரிக்கப்படும் இந்த தயாரிப்பு 2005 இல் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. தற்போது இந்த தயாரிப்பு சந்தையில் அதிகளவு விற்பனையாகும் தயாரிப்புகளில் ஒன்றாக காணப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து நாம் கூந்தல் பராமரிப்பு ஷம்பு வகைகள் மீது நாம் கவனம் செலுத்துகிறோம். அத்துடன், கிருமிகளுக்கு எதிராக போராடக்கூடிய பொடி வொஷ் வகைகள் பற்றியும் நாம் கவனம் செலுத்தி வருகிறோம்.

2020 ஆம் ஆண்டளவில் 100 நாடுகளில் எமது தயாரிப்புகளுக்கு உரிமையை பெற்றிருப்பது என்பதை இலக்காக கொண்டு நாம் செயலாற்றி வருகிறோம். தற்போது நாம் 20 க்கும் மேற்பட்ட நாடுகளில் எமது வர்த்தக நாமத்தின் உரிமையாண்மையை கொண்டுள்ளோம்.

தற்போது எமது தயாரிப்புகள் வரிசையில் ஃபேஸ் வொஷ், கூந்தல் பராமரிப்பு, பொடி வொஷ், குழந்தை தயாரிப்புகள், நிபுணத்துவம் பாவனைக்கான தயாரிப்புகள் மற்றும் ஐரோப்பிய தெரிவுகள் என நூறுக்கும் மேற்பட்ட தயாரிப்புகள் காணப்படுகின்றமை விசேட அம்சமாகும்.

அண்மையில் இலங்கையில் உரத்தட்டுப்பாடு நிலவியது, விவசாயத்துறைக்கும், பெருந்தோட்டத்துறைக்கும் பெரும் சவாலாக அமைந்திருந்தது. இந்த விடயத்தை நாம் கருத்தில் கொண்டு, முற்றிலும் உயிரியல் முறையில் தயாரிக்கப்படும் உர வகைகயை சந்தையில் அறிமுகம் செய்துள்ளோம். இரசாயன உர வகைக்கு மாற்றீடாக அமைந்துள்ள இந்த புதிய உரத்துக்கு, தேயிலை பெருந்தோட்டங்களிலிருந்து பெருமளவு கேள்வி காணப்படுகிறது. இது நூறு வீதம் இலங்கையைச் சேர்ந்த இயற்கை தயாரிப்பாகும். 

2011 ஆம் ஆண்டிலிருந்து நாம் தொடர்ச்சியாக தேசிய பச்சை விருதுகளை நாம் வென்றிருந்தோம். அழகுசாதன பொருட்கள் மற்றும் மருந்துப்பொருட்கள் துறையில் நாம் மட்டுமே இந்த விருதை தொடர்ச்சியாக வென்றுள்ளோம். நடப்பு ஆண்டில் நாம் சூழல் பாதுகாப்புக்கான விருதுகளில் தங்க விருதை வென்றிருந்தோம்.

நாட்டில் யுத்தம் நிறைவடைந்த பின்னர், எமக்கு நாட்டின் சகல பாகங்களுக்கும் எமது தயாரிப்புகளை விநியோகிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்திருந்தது. நாட்டின் வடக்கு கிழக்கு பகுதிகளைச் சேர்ந்தவர்களும் தமது தோற்றம் குறித்து அதிகளவு கவனம் செலுத்தி வருகின்றனர். இந்த சந்தையை பொறுத்தமட்டில் நாம் எமது விநியோகத்தர்களினூடாக ஊக்குவிப்பு மற்றும் பிரச்சார செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறோம். 

எமது நிறுவனத்தில் சுமார் 400 க்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். எமக்கென பிரத்தியேக ஆய்வுகூடத்தை கொண்டுள்ளதுடன், அதில் தாவர பரிசோதனைகளையும் முன்னெடுக்கிறோம். இது சாதாரண ஆய்வுகூட மற்றும் பரிசோதனை செயற்பாடுகளுக்கு மேலதிகமானதாக அமைந்துள்ளது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X