Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
அனுதினன் சுதந்திரநாதன் / 2018 மே 07 , மு.ப. 01:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் அரசியல் நிலைவரம், மிகக் குழப்பகரமாகவுள்ள நிலையில், இலங்கையின் பொருளாதாரத் தளர்வு நிலையும், அத்தியாவசியப் பொருட்களில் விலை அதிகரிப்பு என்கிற செய்தியும் மேலும் இலங்கை மக்களைக் குழப்பத்துக்கு உள்ளாக்கியுள்ளது என்றால் மிகையில்லை.
கடந்த வாரங்களில், பத்திரிகைகளில் இடம்பெற்றிருந்த எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் அத்தியாவசியப் பொருளான பால்மாவின் விலை அதிகரிப்பு தொடர்பான செய்திகள் மிக முக்கியமானவையாகும்.
நல்லாட்சி அரசாங்கத்தால் உறுதிவழங்கப்பட்டது போல நல்லாட்சியையும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும் பேணமுடியாத நிலையில், பொருளாதார ரீதியாக மக்களைப் பாதிக்கக்கூடிய விலை அதிகரிப்புகளும் கூடவே சேர்ந்து, அரசாங்கத்தின் கையாலாகத்தனத்தை மேலும் வெளிக்காட்டும் வகையில் அமைந்திருக்கின்றது.
சர்வதேச நாணயநிதியத்தின் கடனில் பெரிதும் தங்கியுள்ள இன்றைய நல்லாட்சி அரசாங்கத்துக்கு சர்வதேச நாணயநிதியத்தின் விதிமுறைகளே, தற்போது பெரும் இடைஞ்சலாக மாற்றம் பெறத் தொடங்கியுள்ளன.
கடந்த ஏப்ரல் மாதத்தில், சர்வதேச நாணயநிதியத்தின் வேண்டுகோளுக்கு ஏற்ப, இறைவரிச் சட்டம் மாற்றியமைக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன்மூலம், அடுத்த காலாண்டு நிதியை, சர்வதேச நாணயநிதியத்திடமிருந்து பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கின்றபோதிலும், அவர்களின் நிபந்தனைகளில் ஒன்றான, பொருட்கள் மீதான விலை அதிகரிப்பு, அடுத்ததாக வரிசையில் வந்து நிற்கிறது. அதுவும், இந்த அரசாங்கத்தின் போதாதகாலத்துக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் வந்திருப்பது துரதிர்ஷ்டவசமான ஒன்றாகும்.
2015ஆம் ஆண்டில், நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது, மக்களின் வாழ்க்கை செலவைக் குறைப்பதாகச் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக, எரிபொருள் விலையில் குறைப்பைச் செய்திருந்தார்கள்.
அத்துடன், அந்தவிலையை உறுதியாகப் பேணியும் வந்துள்ளார்கள். சர்வதேச சந்தையில் எரிபொருளுக்கான விலையுயர்வடைந்தபோதிலும், நல்லாட்சி அரசாங்கம் அதன் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தத் தயக்கத்தையே காட்டி வந்திருக்கிறது.
ஆனால், தொடர்ச்சியாக சர்வதேச சந்தையில் எரிபொருளின் விலை அதிரித்தபோது, அதன் விலையை இலங்கையில் அதிகரிக்காததன் காரணமாக, இலங்கையின் சென்மதி படுகடன் நிலையும் அந்த விலைச் சமநிலையைப் பேணுவதற்காக அதிகரித்திருக்கிறது.
இதன்விளைவாக, இலங்கையின் கடனின் அளவும், எரிபொருள் சார் திணைக்களங்களின் கடன் மற்றும் நட்ட அளவும் அதிரித்துள்ளன. தற்போது, இது இலங்கைப் பொருளாதாரத்தின் கழுத்தை நெரிக்கும் அளவுக்கு வளர்ந்து நிற்கிறது.
நல்லாட்சி அரசு பொறுப்பேற்று, எரிபொருள் தொடர்பான விலை நிரனையிப்பை மேற்கொள்ளும்போது, சர்வதேச சந்தையிலும் எரிபொருளின் விலை குறைவாகவிருந்தது. அத்துடன், மொத்த இறக்குமதி செலவில் இவ் எரிபொருள் செலவானது 25%தத்தையே பிடித்திருந்தது. உதாரணமாக, 2015ஆம் ஆண்டளவில், எரிபொருள் பீப்பாய் ஒன்றின் விலை 73 - 80 டொலர்களாகும்.
தற்போது, இதன் விலை நிர்ணயிக்கப்பட்ட விலையிலும் பார்க்க, மிகமிக அதிகமாக இருக்கிறது. இது, இலங்கையின் ஒட்டுமொத்த இறக்குமதிச் செலவையும் மிக விரைவாக அதிகரிக்கச் செய்திருக்கிறது. அதுமட்டுமல்லாது, 2016 மற்றும் 2017ஆம் ஆண்டில், ஏற்றுமதி மூலமாக அதிகரித்த இலங்கையின் வருமானத்தில் பெரும்பகுதி, குறித்த எரிபொருள் செலவீனத்தை நிவர்த்திக்கவே பயன்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, ஏற்றுமதி வருமானத்தை தொடர்ந்தும், எதிர்வரும் காலங்களில் அபிவிருத்தியைத் தவிர்த்து, இறக்குமதிக் கடனை நிவர்த்திக்கப் பயன்படுத்த முடியாது. இதனைத் தீர்க்க, தற்போது சர்வதேச நாணயம் முன்வைத்துள்ள தீர்வே, எரிபொருள் விலையுட்பட அத்தியாவசிய பொருட்களின் மீதான விலை அதிகரிப்பு.
அதாவது, இவ்வளவு காலமும் நல்லாட்சி அரசாங்கத்தில் அனுபவித்த சுகஅனுபவங்களுக்கான விலையை, நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்திலேயே மீளச்செலுத்தும் நிலை, இலங்கை மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.
சர்வதேச நாணயநிதியம் ஆரம்பம் முதலே, இலங்கையின் எரிபொருள் விலைமுறைமை தொடர்பில் எச்சரிக்கை விடுத்திருந்ததுடன், அதில் மாற்றம் செய்வது அவசியம் என்பதையும் எடுத்துரைத்திருந்தது.
ஆனால், இலங்கை மக்களிடம் நற்பெயரைப் பெற்றுக்கொள்ளவும், அரசியல் நலனுக்காகவும் நல்லாட்சி அரசாங்கம் அதைப் புறக்கணித்தே வந்திருந்தது. எல்லாவற்றுக்கும் ஒரு எல்லையுள்ளது என்பதுபோல, இனியும் புறக்கணிக்கவியலாத எல்லைக்கு நல்லாட்சி அரசு வந்திருக்கிறது.
இதனால், எரிபொருள் தொடர்பான புதிய விலைப் பொறிமுறையை அறிமுகம் செய்யவேண்டியநிலை ஏற்பட்டுள்ளதுடன், அதன் விளைவாக, அதிகரிக்கவுள்ள எரிபொருள் விலையின் பிரதிகூலங்களையும் எதிர்கொள்ள வேண்டியதாக உள்ளது.
சர்வதேச நாணயநிதியத்தால் கடந்த 22ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘சர்வதேச நாணயநிதியத்தின் ஆதரவுத் திட்டத்துக்கு இணக்கமான எரிபொருள் விலைப்பொறிமுறையை அமைச்சரவை அனுமதியுடன் எதிர்வரும், ஜூன் 2018ஆம் ஆண்டுக்கு முன்பாக நடைமுறைக்குக் கொண்டுவருவது அவசியமாகிறது. இதன் மூலம், நாலாம் காலாண்டுக்கான அடைவுத் திட்டங்களை அடைய முடிவதுடன், அவற்றைப் பரிசீலனை செய்து, இலங்கைக்கான நிதி வளங்களை மேற்கொள்ள, சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்க்கிறது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, இலங்கை அரசாங்கம் எரிபொருள் விலையிடல் பொறிமுறை தொடர்பிலும், அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் தொடர்பிலும் தீர்க்கமான முடிவுகளை எடுக்கவேண்டியது தவிர்க்க முடியாத விடயமாகவுள்ளது.
இலங்கை அரசாங்கம், குறித்த நிலையை எதிர்கொள்ள வேண்டிய நிலை வரலாம் என்பதையும் அறியாமலில்லை. இந்த நிலையைத் தவிர்க்க, அரசாங்கம் பல்வேறு செயல்பாடுகளை முன்னேடுக்காமலுமில்லை. உதாரணமாக, பொதுபடுகடன் மற்றும் எரிபொருள் நட்டநிலையை சரிசெய்யவென, இலங்கை அரசாங்கம் மறைமுகமாகப் பல்வேறு வரிகளை அறிமுகம் செய்திருந்தது.
சொத்துகள் மீதான வரி மற்றும் வாகனங்களுக்கான கார்பன் வரி என்பவற்றை மேற்கோள்காட்டிச் சொல்லலாம். ஆனால், இவை எல்லாம் அரசாங்கம் எதிர்பார்த்த பெறுபேறுகளை தரவில்லை. எனவேதான், சர்வதேச நாணயநிதியம் பரிந்துரைத்த வழியில் செல்லவேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில், இலங்கை அரசாங்கம் புதிய எரிபொருள் விலையிடல் பொறிமுறையை அறிமுகம் செய்வதும், அத்தியாவசியப் பொருட்களின் விலையை அதிகரிப்பதும்தான் தனித்து ஒருவழியா? எனப் பலரும் எண்ணக்கூடும். ஆனால், இவற்றை விடவும் இன்னமும் சில வழிகள் உள்ளன.
அவை, அரசாங்கத்தால் விரும்பப்படாததும், மக்களால் வரவேற்கப்படக்கூடியதுமான வழிமுறையாக இருக்கும். குறிப்பாக, இலங்கை அரசு, விலை அதிகரிப்பில் கவனத்தைச் செலுத்தும் அதே அளவுக்குச் செலவினங்களைக் குறைப்பதிலும் கவனத்தைச் செலுத்துவது வரவேற்கக்கூடிய மாற்றமாகும்.
இலங்கை அரசாங்கத்தின் தற்போதைய செலவினங்களில் சேர்க்கப்பட்ட மிக அத்தியாவசியமற்ற செலவீனமாக, அமைச்சர்களுக்கு அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவு மற்றும் அவர்களுக்கான ஆடம்பர வாகன இறக்குமதிக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் அளவு உள்ளது.
இந்தச் செலவை இல்லாமல் செய்வதன் மூலமே, கணிசமான அளவு சென்மதி படுகடன் அளவை நிவர்த்திக்க முடியும். ஆனால், நல்லாட்சி எனச் சொல்லிக்கொண்டு, அரசாங்கம் தனது நலனை அதிகரித்துக்கொண்டு செல்வது, புரியாத புதிராக இருக்கிறது. அதற்கான சுமையை, விலை அதிகரிப்பு என்கிற பெயரில் மக்களிடத்தில் சுமத்துவது அர்த்தமற்ற செயலாகவும் உள்ளது.
இந்தப் பத்தி எழுதிக்கொண்டு இருக்கும் வரையில், இலங்கையில் எரிவாயுவுக்கு 245 ரூபாயாலும், கிழங்கு மற்றும் பெரிய வெங்காய இறக்குமதிக்கு கிலோவுக்கு 40 ரூபாயாகவும், 400 கிராம் பால்மாவுக்கு 20 ரூபாயாலும் விலை அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.
இவை இன்றைய நிலையில், இலங்கை மக்களால் அதீத அளவில் பயன்படுத்தப்படும் அத்தியாவசியப் பொருட்களாக இருக்கின்றன. இவற்றின் விலையை அதிகரிப்பதென்பது, நேரடியாகவே நடுத்தர மற்றும் ஏழ்மை நிலையிலுள்ள மக்களைப் பாதிக்கச்செய்யும் நடவடிக்கைகளாகும்.
இது நல்லாட்சி அரசாங்கத்தின் வினைத்திறனற்ற நிர்வாகத்தின் கையாலாகாத் தனத்தை வெளிப்படுத்துவதுடன், இன்னமும் இதுபோன்ற விலை அதிகரிப்புகளுக்கு, நாம் தயாராக வேண்டும் என்கிற நிலைக்கான அபாய அறிகுறியாகவும் அமைந்துள்ளது.
விலை அதிகரிப்பு ஒன்றே எல்லாவற்றுக்கும் தீர்வு என்கிற வங்குரோத்து நிலையை இலங்கை அரசாங்கம் கைவிட்டு, மாற்றுப் பொருளாதாரக் கொள்கைகளின் மூலமாக நிதிப் பற்றாக்குறையை நிவர்த்திக்கக் கூடியவகையில் செயல்பட வேண்டியது அவசியமாகிறது.
குறிப்பாக, வேலைவாய்ப்பு உட்பட வருமானத்தை ஏற்படுத்தக்கூடிய வழிமுறைகளை ஊக்குவித்தல், பொது மானியங்களை வினைத்திறனாகப் பயன்படுத்தல், இன்னபிற அநாவசிய செலவீனங்களைக் குறைத்தல் என்பவற்றின் ஊடாக, மக்களுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தாத வகையில் தீர்வை ஏற்படுத்த முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும்.
அவ்வாறு இல்லையெனில், மக்களின் அபிமானத்தைப் பெற்று அரச பீடமேறிய நல்லாட்சி அரசாங்கம், மக்களாலேயே அவ்விடத்திலிருந்து அகற்றப்படுவது தவிர்க்க முடியாததாகிவிடும்.
17 minute ago
19 minute ago
19 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
19 minute ago
19 minute ago
27 minute ago