2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

வெள்ள சேதங்களுக்கு காப்புறுதி கைகொடுக்கும்?

Gavitha   / 2016 மே 30 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ச.சேகர்

கடந்த வாரம் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக உடைமைகளையும், சொத்துக்களையும் இழந்தவர்களுக்கு காப்புறுதி கைகொடுக்கும் என நிதி அமைச்சர் அறிவித்திருந்தார். இலங்கையைச் சேர்ந்த காப்புறுதி செய்யாதவர்களுக்கு இயற்கை அனர்த்தங்களினால் ஏற்படும் சேதங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் வகையில் அண்மையில் பிரி;த்தானியாவின் முன்னணி காப்புறுதி மற்றும் மீள் காப்புறுதி சேவைகளை வழங்கும் நிறுவனமொன்றுடன் இலங்கை தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியம் உடன்படிக்கையை ஏற்படுத்தியிருந்தது. இதன் அடிப்படையில் கிரெசன்ட் குளோபல் எனும் நிறுவனம் இந்தச் சேவைகளை இலங்கைக்கு வழங்க முன்வந்துள்ளதாக குறித்த நிறுவனத்துடன் தொடர்பை ஏற்படுத்தியிருந்த போது அறிந்து கொள்ள முடிந்தது.

இலங்கையில் காப்புறுதி செய்து கொள்ளாத சகல குடிமக்கள் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர வியாபார உரிமையாளர்கள், ஏற்படக்கூடிய சுனாமி, சுழல் காற்று அல்லது பாரியளவு அழிவுகளைஏற்படுத்தக்கூடிய ஏனைய இயற்கை அனர்த்தங்கள் மூலம் தமது வியாபாரங்கள், வீடுகள் மற்றும் வாழ்வாதாரங்கள் பாதிப்படையக்கூடும் என்பது தொடர்பில் எவ்விதமான அச்சத்தையும் கொண்டிருக்க வேண்டியதில்லை. அத்துடன் அவர்களின் ஊக்கமும் எவ்விதத்திலும் பாதிப்படையாது என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

இலங்கை என்பது தற்போது தமது குடிமக்களை பாதுகாக்கும் வகையில் காப்புறுதித் துறையில் சிறந்த செயற்பாடுகளை பின்பற்றும் ஒரு நாடாக அமைந்துள்ளது. குறிப்பாக சுகயீனம் மற்றும் இயற்கை அனர்த்தங்களிலிருந்து பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. இதன் பிரகாரம் இலங்கைக்கு 10 பில்லியன் ரூபாய் பெறுமதியான காப்புறுதியை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் அறிவித்திருந்தார்.

தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியம், இலங்கையில் காப்புறுதி செய்து கொள்ளாத சகல இலங்கை குடிமக்களையும், அவர்களின் காப்புறுதி செய்து கொள்ளப்படாத சொத்துக்களையும் காப்புறுதி செய்வதற்காக ரூ. 10 பில்லியன் பெறுமதியான பெருந்தீங்குகளை விளைவிக்கக்கூடிய மீள் காப்புறுதியை லண்டனில் அமைந்துள்ள பிரதான மீள் காப்புறுதி நிறுவனத்திடமிருந்தும், உலகின் ஏனைய பாகங்களில் காணப்படும் நிறுவனங்களிலிருந்தும் மேற்கொண்டுள்ளது.

இந்த உடன்படிக்கைகள் ஏற்படுத்தியிருந்த போதிலும், வாய்மூல வாக்குறுதிகள் வழங்கப்பட்ட போதிலும், இவை நடைமுறைச் சாத்தியமான முறையில் எவ்வாறு செயற்படுத்தப்படும், சகலருக்கும் அறிவிக்கப்பட்ட 100,000 ரூபாய் காப்புறுதித் தொகை எவ்வாறு சென்றடையும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டியுள்ளது.

காப்புறுதியில் பொதுக் காப்புறுதி மற்றும் ஆயுள் காப்புறுதி என இரு பிரிவுகள் காணப்படுகின்றன. வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் தமது சொத்துக்களை புதுப்பித்துக் கொள்வதற்காகவும், பாதிக்கப்பட்ட வியாபாரங்கள் தமது வர்த்தக செயற்பாடுகளை மீளமைத்துக் கொள்ள காப்புறுதி நிறுவனங்களிடமிருந்து நஷ்டஈடுகளை கோர ஆரம்பித்துள்ளதாக பெரும்பாலான காப்புறுதி நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இவற்றில் ஒரு சில காப்புறுதி நிறுவனங்கள் தாம் பாரியளவு காப்புறுதித் தொகையை செலுத்தியுள்ளோம் என அறிவித்து செய்தி அறிக்கைகளையும் வெளியிட்டிருந்தன.

காப்புறுதி என்பது ஒரு பாதுகாப்பு சேவையாகும். இவற்றை வாடிக்கையாளர்களுக்கு தெளிவுபடுத்தியே பெருமளவான நிறுவனங்கள் காப்புறுதிகளை வழங்குகின்றன. இந்நிலையில், அனர்த்தம் ஒன்று ஏற்படும் நிலையில் அதனால் பாதிப்படையும் மக்களுக்கும் வியாபாரங்களுக்கும் தாம் வழங்கிய வாக்குறுதிக்கமைய நஷ்டஈடுகளை வழங்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் காப்புறுதி நிறுவனங்கள் உள்ளன.

இதேவேளை பொதுக்காப்புறுதி சேவைகளை வழங்கும் தனியார் துறையைச் சேர்ந்த நிறுவனமொன்றின் பேச்சாளர் ஒருவருடன் தொடர்பை ஏற்படுத்தி தற்போதைய நிலைவரம் தொடர்பில் கருத்துக் கேட்ட போது,
நஷ்டஈடுகளுக்கான கோரிக்கை தற்போது தமது பெருமளவில் குவிந்த வண்ணமுள்ளதாகவும், ஏனைய கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் தமக்கு கிடைத்துள்ள நஷ்டஈட்டுக் கோரிக்கை சுமார் 75 சதவீத அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும், வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களின் நஷ்டஈட்டு கோரிக்கைகளை துரித கதியில் செலுத்துவதற்கு தமது நிறுவனத்தின் உயர் மட்டத்திலிருந்து பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாகவும், இதன் போது வழமையான காப்புறுதி நஷ்டஈடுகள் வழங்குவதற்கான விதிமுறைகள் பின்பற்றப்படமாட்டாது எனவும் அறிவித்துள்ளது.

இலங்கை அரசு வாக்குறுதி வழங்கியுள்ள இலவச காப்புறுதி சேவையில் மட்டும் மக்கள் தங்கியிராமல், விசேடமாக இடர்கள் நிறைந்த பகுதிகளுக்கு அண்மையில் வசிக்கும் மக்கள் தமது வீடுகளுக்கும், வியாபாபரங்களுக்கும் காப்புறுதி ஒன்றை பெற்றுக் கொள்வதன் மூலமாக எதிர்காலத்தில் ஏற்படும் இயற்கை அனர்த்தங்களினால் ஏற்படும் சேதங்களுக்கு ஓரளவேனும் நிவாரணத்தை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X