
எக்ஸ்போலங்கா குழுமமானது வரலாற்றில் முதல் தடவையாக வருடாந்த நிதிப் புரள்வாக 50 பில்லியன் ரூபாவை அடைந்துள்ளது. இதன்படி, சரக்கு அனுப்புதல் மற்றும் உபகரண சேவை வழங்கல் துறையிலான 64 சதவீத வளர்ச்சியினால் முன்னகர்த்தப்பட்ட ஆண்டுக்கு - ஆண்டு அடிப்படையிலான 41 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்திருக்கின்றது. எக்ஸ்போலங்கா ஹோல்டிங்ஸ் நிறுவனம் 2012/2013 நிதியாண்டு காலப்பகுதியில் கூட்டிணைக்கப்பட்ட வரிக்குப் பின்னரான தேறிய இலாபமாக ரூபா 1.28 பில்லியனை தக்கவைத்துக் கொண்டுள்ள அதேநேரம், கூட்டிணைக்கப்பட்ட வரிக்கு முன்னரான தேறிய இலபமாக ரூபா 1.67 பில்லியனை பதிவுசெய்தது. நான்காம் காலாண்டில் ஆண்டுக்கு-ஆண்டு அடிப்படையில் வருமான பெறுகைகள் 38 சதவீத வளர்ச்சியையும், மொத்த இலாபத்தில் 16 சதவீத வளர்ச்சியையும் பதிவுசெய்துள்ளது.
2012/13 நிதியாண்டில் சரக்கு அனுப்புதல் மற்றும் உபகரண சேவை வழங்கல் துறை வரிக்கு பின்னரான இலாபமாக ரூபா 1.18 பில்லியனை பதிவுசெய்ததுடன், இது 6.6 சதவீத அதிகரிப்பாகவும் அமைகின்றது. அதேவேளை பயணம் மற்றும் ஓய்வுகால சேவைகள், சர்வதேச வர்த்தகம், முதலீடுகள் மற்றும் சேவைகள் போன்ற ஏனைய மூன்று முக்கிய துறைகளும் குழுமத்தின் வரிக்குப் பின்னரான இலாபத்திற்கு மொத்தமாக ரூபா 101 மில்லியனை பங்களிப்பாக பெற்றுக் கொடுத்துள்ளன.
'இடைவிடாது மாற்றமடைந்து செல்கின்ற உலக பேரின பொருளாதார சூழலில் நாம் தொடர்ந்தும் சவால்களை எதிர்கொண்டுள்ளோம் என்பதை எமது குழுமத்தின் வருட இறுதி நிதிப் பெறுபேறுகள் பிரதிபலிக்கின்றன' என்று எக்ஸ்போலங்கா ஹோல்டிங்ஸ் பி.எல்.சி. குழும பிரதம நிறைவேற்று அதிகாரி ஹனீப் யூசுப் காலாண்டு நிதிப் பெறுபேறுகள் குறித்த தனது கருத்தை வெளியிட்டார். அவர் மேலும் கூறுகையில், 'இவ் வருட காலப்பகுதியில் ஐரோப்பிய சந்தைகளிலான வணிக நடவடிக்கையில் ஏற்பட்ட வீழ்ச்சிப்போக்கு மற்றும் புதிய முதலீடுகள் தொடர்பில் நிறுவனம் மேற்கொண்ட 'நீண்ட கருத்திட்ட கால' முயற்சிகள் ஆகியவற்றின் காரணமாகவே எக்ஸ்போலங்கா குழுமத்தின் செயற்பாடுகள் சவாலுக்கு உட்படுத்தப்பட்டன. வளர்ச்சி வெளிப்படையாகப் புலப்படும் சந்தைகளுக்குள் நகர்வதன் ஊடாக இவ்வாறான சில சவால்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டுள்ளோம்' என்றார்.
'எவ்வாறிருந்த போதிலும், பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இக்காலப்பகுதியில் சரக்கு அனுப்புதல் துறையானது வருமானத்தில் தனிச்சிறப்புவாய்ந்த 64 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது. அதன்படி, சரக்கு அனுப்புதல் மற்றும் உபகரண சேவை வழங்கல் துறையில் இப்பிராந்தியத்திலேயே மிக முக்கியமானதொரு நிறுவனமாக எக்ஸ்போலங்கா வகித்து வருகின்ற அந்தஸ்து மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மகிழ்ச்சி அளிக்கக் கூடிய விதத்தில் சரக்கு அனுப்புதல் துறையில் பெரும்பகுதியை தம்வசப்படுத்தியுள்ள முன்னேறிச் செல்கின்றோம். அதுமாத்திரமன்றி அலகுகளின் எண்ணிக்கையை பலப்படுத்துகின்ற அதேநேரம் செயற்பாட்டுத் திறனை மேம்படுத்தும் விடயத்திலும் நாம் கூடிய கவனம் செலுத்தியிருக்கின்றோம். புதிதாக நாம் மேற்கொள்ளும் முதலீடுகள் மீதான வருமானங்கள் குறுகிய காலத்திற்குள்ளேயே எமது நிறுவனத்தின் ஒட்டுமொத்த இலாப எல்லையை மிகச் சிறப்பாக பலப்படுத்தும் என்று நாம் நம்புகின்றோம். ஒறுகொடவத்தையில் முதன்மையானதும் மிக முன்னேற்றகரமான வசதிகளை தன்னகத்தே கொண்டதுமான களஞ்சியசாலை தொகுதியை நிர்மாணிக்கும் பணிகள் முடிவடையும் தறுவாயை அண்மித்துள்ளது. இந்த களஞ்சியசாலையானது அனைத்து உபகரண விநியோக தேவைகளையும் நிவர்த்தி செய்வதாக அமையும். இது, களஞ்சியப்படுத்தும் வசதியை மட்டும் வழங்காமல், பெறுமதிசேர் செயன்முறையையும் வழங்குகின்றது.
உலகெங்கும் உள்ள எமது வாடிக்கையாளர்கள் - அதிலும் குறிப்பாக நவநகரிக போக்குடையவர்களுக்கு முழுமையானதொரு தீர்வினை வழங்குவதன் ஊடாக எமது வர்த்தகத்தை அடுத்த மட்டத்திற்கு இது முன்கொண்டு செல்லும். சரக்கு அனுப்புதல் மற்றும் உபகரண சேவை வழங்கல் துறையில் ஐக்கிய அமெரிக்கா, சீனா மற்றும் ஹொங்கொங் ஆகிய நாடுகளில் நாம் மேற்கொண்டுள்ள முதலீடுகள் எமது எதிர்பார்ப்புகளையும் கடந்த செயற்பாட்டுப் பிரதிபலனை வெளிப்படுத்தியுள்ளன. அதனது முதலாம் ஆண்டு செயற்பாடு தொடர்பான பெறுபேறுகள் ஊக்கமளிப்பனவாக காணப்படுகின்ற அதேநேரம், இந்த முதலீடுகளில் இருந்து மேலும் பலம்பொருந்த பங்களிப்புகளை மிகக் குறுகிய காலத்திற்குள் பெற்றுக்கொள்ள நாம் எதிர்பார்க்கின்றோம்' என்று குறிப்பிட்டார்.
சர்வதேச வர்த்தகம் மற்றும் உற்பத்தியாக்கல் துறை எதிர்பார்க்கப்பட்டதை விடவும் குறைந்த மட்டத்திலான நிதிப் பெறுபேறுகளை பதிவு செய்தது. பாதகமான காலநிலையானது விவசாய ஏற்றுமதி வர்த்தகத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியது. இத்தோடு தமது பிரதான வெளிநாட்டுச் சந்தைகளில் நிலவிய மோசமான பொருளாதார சூழலானது அதனது நிர்ணயிக்கப்பட்ட அடைவு எல்லைகளை அடைவதற்கு தடங்கலாக விளங்கியது. மேலும், விளைபொருட்களின் சந்தையில் காணப்பட்ட விலைத் தளம்பலின் தாக்கத்தினால் அதிலிருந்தான உழைப்பு குறைவானதாக இருந்தது. இத்துறையில் இலாபம் உழைக்கும் தன்மையை மேம்படுத்திக் கொள்ளும் பொருட்டு, மையப் பிரிவுகள் அல்லாத (Non-core) பிரிவுகளின் செயற்பாடுகளை மீள் பரிசீலனைக்கு உட்படுத்தும் நடவடிக்கையில் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட காலப்பகுதியில் பயணம் மற்றும் ஓய்வுகால சேவைத் துறை ஆரோக்கியமான செயற்பாட்டை பதிவுசெய்துள்ளது. வெளியக பயணத் துறையினால் வழங்கப்பட்ட புத்தாக்க உற்பத்தி, சேவைகளின் காரணமாக அத்துறையில் தொடர்ச்சியாக வளர்ச்சியை பதிவு செய்தது. அக்குவாசன் ஹொலிடேய்ஸ் நிறுவனத்தை அண்மையில் கையகப்படுத்தியமை, இத்துறையில் விரைவான வளர்ச்சிக்கு வழிவகுத்தது. விற்பனையில் அதிகரிப்பை பேணுகின்ற அதேநேரத்தில் தொழிற்பாட்டு செயற்றிறனை பலப்படுத்துவதிலும் தற்போது கவனம் செலுத்தப்படுகின்றது.
யூசுப் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், 'தற்போதிருக்கின்ற வர்த்தகங்கள் மற்றும் குழுமத்திலுள்ள உற்பத்தி, சேவைத் தொடர்களை பலப்படுத்தி கூட்டிணைப்பதில் அடுத்த வருடம் அதிக கவனம் செலுத்தப்படும். அதற்கான பரிசீலனை இப்போது மேற்கொள்ளப்படுகின்றது. எம்மை எதிர்நோக்கியுள்ள எதிர்காலம், மாறுபட்ட அணுகுமுறையை வேண்டி நிற்கின்ற ஒன்றாகவுள்ளது. அத்துடன் கையாள்தலில் நாம் கொண்டுள்ள அனுபவத்தை மாற்றியமைப்பதும் மிக முக்கியமானதாக உள்ளது. எதிர்வரும் வருடத்திலும் வர்த்தகத்தை வளர்ச்சிகாணச் செய்வதில் எமது நிறுவனம் தொடர்ந்தும் சாதக சிந்தனை மற்றும் நம்பிக்கையுடன் இருக்கின்றது.