2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

பங்குச்சந்தையில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு கொள்வனவு ஆர்வம் தொடர்கிறது

A.P.Mathan   / 2013 மார்ச் 17 , மு.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


- பங்குச்சந்தை மற்றும் தங்கம், வெள்ளி விலை நிலைவரங்கள்


(ச.சேகர்)

வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு கொள்வனவு தொடர்பான ஆர்வம் பங்குச்சந்தையில் அதிகளவு கடந்த வாரம் அவதானிக்க முடிந்தது. விசேடமாக கொமர்ஷல் வங்கி, ஜோன் கீல்ஸ், சிலோன் டுபாக்கோ போன்ற நிறுவனங்களின் பங்குகளில் அதிகளவு ஆர்வத்தை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளிப்படுத்தியிருந்தனர். மேலும் தேசிய அபிவிருத்தி வங்கியின் பங்குகள் மீதான நாட்டமும் கடந்த வாரம் அதிகளவில் காணப்பட்டது. மிகப்பெரிய அளவிலான பங்கிலாப அறிவித்தலை தேசிய அபிவிருத்தி வங்கி வெளியிடும் என்ற எதிர்பார்ப்பு பங்குதாரர்கள் மத்தியில் காணப்படுகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை நடவடிக்கைகள் நிறைவடையும் பொழுது, அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 5,691.39 ஆகவும், S&P ஸ்ரீலங்கா 20 சுட்டி 3222.74 ஆகவும் அமைந்திருந்தன.

மார்ச் 11ஆம் திகதியுடன் ஆரம்பமான கடந்த வாரத்தின் இறுதியில் மொத்த பங்கு புரள்வு பெறுமதியாக ரூ. 3,014,259,096 அமைந்திருந்தது. கடந்த வாரம் மொத்தமாக 21,187 பங்கு கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றன. இதில் உள்நாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 19,837 ஆகவும் வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 1,350 ஆகவும் பதிவாகியிருந்தன.

கடந்த வார கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் ஆசிரி சேர்ஜி., மேர்க். சிப்பிங், சிலோன் டீ புரோக்கர்ஸ், கொம்.லீசிங் அன்ட் ஃபினான்ஸ் மற்றும் மெட்.ரெஸ்.ஹொல். போன்றன முதல் ஐந்து சிறந்த இலாபமீட்டிய பட்டியலிடப்பட்ட கம்பனிகளாக பதிவாகியிருந்தன.

என்வி றிசோர்சஸ் (உரிமைப்பங்குகள்) (1.30), சிலோன் லெதர் (உரிமைப்பங்குகள்), பீசி ஹவுஸ், மிரமர் மற்றும் என்வி றிசோர்சஸ் (உரிமைப்பங்குகள்) (2.10) போன்ற நிறுவனங்களின் பங்குகள் அதிகளவு நஷ்டமீட்டியதாக பதிவாகியிருந்தன.



தங்கம் மற்றும் வெள்ளி விலை
கடந்த வாரம் தங்கத்தின் விலை 24 கெரட் பவுணொன்று 51,700.00 ரூபாவை அண்மித்து காணப்பட்டதாக தங்கநகை வட்டாரங்களின் மூலம் அறிய முடிந்தது. 22 கெரட் பவுணொன்று சராசரியாக 47,400 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது. நாம் வழங்கும் தங்கத்தின் பெறுமதி, தங்கக் கட்டி அல்லது பிஸ்கட் ஒன்றின் பெறுமதி என்பது கருத்தில் கொள்ளப்படல் வேண்டும். நகைகள் தயாரிக்கையில் இந்த பெறுமதி மேலும் அதிகரிக்கும்.

வெள்ளி 1 கிலோகிராமின் சராசரி விலை 1470.00 ரூபாவை அண்மித்து காணப்பட்டதாக சந்தை அறிக்கைகள் தெரிவித்திருந்தன.

நாணய மாற்று விகிதம்
கடந்த வாரம் டொலருக்கு நிகரான ரூபாவின் சராசரி விற்பனை பெறுமதி 127.90 ஆக பதிவாகியிருந்தது. ஐக்கிய இராச்சிய பவுணுக்கு நிகரான சராசரி விற்பனை பெறுமதி 193.45 ஆக காணப்பட்டிருந்தது. தொடர்ந்தும் ஸ்ரேளிங் பவுணுக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த வாரமும் வீழ்ச்சியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. சர்வதேச நாடுகளில் ஸ்ரேலிங் பவுணுக்கான மதிப்பு வீழ்ச்சியடைந்து வருகின்றமையை அவதானிக்க முடிந்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .