
இலங்கை கிரிக்கெட் அணிக்கான அனுசரணையை வழங்க இலங்கை தேயிலை சபை முன்வந்துள்ளது. இதற்கான உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வும், காசோலை கையளிப்பு நிகழ்வும் நேற்று கொழும்பில் இடம்பெற்றது.
615 மில்லியன் ரூபா பெறுமதியான மூன்று ஆண்டு காலப்பகுதிக்கான அனுசரணையை வழங்க இலங்கை தேயிலை சபை முன்வந்துள்ளதுடன், நேற்றைய தினம் முதற்கட்டமாக 205 மில்லியன் ரூபா காசோலை இலங்கை தேயிலை சபையின் தலைமை அதிகாரி ஜானகி குருப்பு மூலம் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் ஜயந்த தர்மதாசவிடம் கையளிக்கப்பட்டது. எஞ்சிய தொகை இரண்டு கொடுப்பனவு முறைகளில் வழங்கப்படவுள்ளன.
டயலொக் ஆக்சியாடா நிறுவனம் இலங்கை கிரிக்கெட் அணிக்கான உத்தியோகபூர்வ அனுசரணையை ஏற்கனவே வழங்கியுள்ள நிலையில், இலங்கை தேயிலை சபை இந்த அனுசரணையை வழங்க முன்வந்துள்ளமையானது, முதல் தடவையாக இலங்கை கிரிக்கெட் சபைக்கு இரண்டு அனுசரணையாளர்கள் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை தேயிலைக்கு சர்வதேச ரீதியில் பிரபல்யப்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானத்தை தாம் மேற்கொண்டிருந்ததாக விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
இந்த உடன்படிக்கையின் மூலம் இலங்கை தேயிலைக்கு சர்வதேச ரீதியில் சிறந்த பிரபல்யத்தை பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை தேயிலை சபை வட்டாரங்கள் அறிவித்துள்ளன.
