2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

எக்ஸ்போ லங்கா நிறுவனத்தால் பல்லுயிரின பகுதிகள் ஸ்தாபிப்பு

A.P.Mathan   / 2013 ஜூலை 01 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கையில் பல்லுயிரின பரம்பலை ஊக்குவிக்கும் வகையில், எக்ஸ்போ லங்கா ஹோல்டிங்ஸ் பிஎல்சி நிறுவனம், ஹினிதும மரங்கள் நடுகை திட்டத்தில் கைகோர்த்துள்ளது. காபன் கொன்சல்டிங் கம்பனி (CCC) மற்றும் ரெயின் ஃபொரெஸ்ட் ரெஸ்கியு இன்டர்நஷனல் (RRI) உடன் இணைந்து நாட்டின் மழைக் காடுகளை பாதுகாப்பதற்காக ஒன்றிணைந்துள்ளது.
 
உலகின் மிகச்சிறந்த பல்லுயிரன பரம்பல் பகுதியாக இனங்காணப்பட்டுள்ள இலங்கை, மலேயகுடாபகுதியில் அமைந்துள்ள மழைக் காடுகளை போன்ற தலைசிறந்த சூழல் கட்டமைப்பை கொண்டுள்ளமை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆயினும், தொடர்ச்சியான காடழிப்பு செயற்பாடுகள், விவசாய நடவடிக்கைகளுக்காக நிலங்களை மாற்றியமைப்பது மற்றும் சட்டவிரோதமான முறையில் மரங்களை தறிப்பது போன்ற நடவடிக்கைகளின் காரணமாக 4 வீதமான மழைக்காடுகளே எஞ்சியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
 
உலக சுற்றுச்சூழல் தினத்தன்று இந்த தீர்மானம் அறிவிக்கப்பட்டிருந்ததுடன், இந்த பல்லுயிரன திட்டம் பரந்த மழைக்காடுகளாக திகழும் சிங்கராஜ மற்றும் கன்னெலிய ஆகிய பகுதிகளுக்கிடையில் இந்ததிட்டம் 'Analog Forestry' முறைக்கமைய அமையவுள்ளது. 1000இற்கும் அதிகமான மரங்களை உடனடியாக நடும்வகையில் இந்ததிட்டம் அமைந்திருப்பதுடன், ஹினிதும பிரதேசத்துக்கு அருகில் இந்ததிட்டம் அமையவுள்ளதால், இந்த திட்டத்துக்கு 'ஹினிதும இயற்கை இணைப்பு பகுதி' என பெயரிடப்பட்டுள்ளது.
 
எக்ஸ்போ லங்கா நிறுவனத்தின் சந்தைப்படுத்தல், கூட்டாண்மை தொடர்பாடல்கள் மற்றும் சமூக பொறுப்புணர்வு நடவடிக்கைகள் போன்றவற்றுக்கான தலைமை அதிகாரி பெடி வீரசேகர கருத்து தெரிவிக்கையில், 'இதுபோன்ற பல்லுயிரன பரம்பல் திட்டங்களை முன்னெடுப்பதன் மூலம், எக்ஸ்போ லங்கா சூழலை முன்னேற்றுவதை மட்டும் கருத்தில் கொள்ளாமல், குறித்த பிரதேசங்களை சேர்ந்த சமுதாயங்களையும் இணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இரண்டாம் நிலைநோக்கமாக, இந்த இயற்கை வளங்கள் அதிகளவில் காணப்படும் மற்றும் அழிக்கப்படக்கூடிய அபாய நிலையை பாரம்பரிய சமுதாயத்துக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது. நாம் விவசாயிகளை இனங்கண்டு, அவர்களை அணுகி இந்த திட்டத்துடன் இணைந்து செயலாற்றுமாறு அழைப்பு விடுத்துள்ளோம்' என்றார்.
 
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், 'இது ஒரு நீண்டகால திட்டமாகும். 'சூழல் கட்டமைப்பு சேவைக்கான கொடுப்பனவுகள்' முறையின் மூலம் இந்த மரங்களை பராமரிக்கும் விவசாயிகளுக்கு கொடுப்பனவு முறை ஒன்றும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு மாதாந்தம் தாம் பராமரிக்கும் மரங்களின் எண்ணிக்கைக்கு அமைவாக கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதுடன், 20 வருடங்களுக்கு இந்ததிட்டம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது' என்றார்.
 
காபன் கொன்சல்டிங் கம்பனியின் பிரதம செயற்பாட்டு அதிகாரி சனித் டி எஸ்.விஜேரத்ன கருத்து தெரிவிக்கையில், 'நிலையாண்மை என்பது, தற்காலகட்டத்தில் சாதாரணமாக பேசப்படுகின்ற வார்த்தை மாத்திரமல்ல. உலகளாவிய ரீதியில், பெருமளவான கம்பனிகள் தமது நாளாந்த செயற்பாடுகளில் நிலையாண்மை மற்றும் சூழல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. எக்ஸ்போ லங்கா நிறுவனத்தின் இந்த ஒன்றிணைவு குறித்து நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இது ஏனைய பல நிறுவனங்களுக்கு சிறந்த முன்னுதாரணமாக அமைந்திருக்கும் என எதிர்பார்க்கிறோம்' என்றார்.
 
'தான் இயங்கும் சமுதாயங்களில் நீண்டகாலம் நிலைத்திருக்கக்கூடிய திட்டங்களை முன்னெடுப்பது குறித்து அதிகளவு ஆர்வத்தை எக்ஸ்போ லங்கா ஹோல்டிங்ஸ் பிஎல்சி வெளிப்படுத்திவருகிறது. நாம் முன்னெடுக்கும் சமூக பொறுப்புணர்வு திட்டங்கள், எமது ஊழியர்களுக்கும், சமுதாயங்களுக்கும் மற்றும் இதர பங்குதாரர்களுக்கும் பொருளாதார மற்றும் சூழல் அனுகூலங்களை வழங்கும் வகையில் அமைந்துள்ளன. கடந்த காலங்களில் கம்பனியின் மூலம் பல நீண்டகால மற்றும் குறுகியகால சமூக பொறுப்புணர்வு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. எதிர்காலத்திலும் இதுபோன்ற திட்டங்களை முன்னெடுக்க நாம் தயாராகவுள்ளோம்' என்று பெடி வீரசேகர மேலும் தெரிவித்தார்.
 
காபன் நியுட்ரல் சான்றிதழை பெற்றுக் கொண்ட இலங்கையின் முதலாவதும் ஒரேயொரு சரக்குகள் கையாள்கை கம்பனி எனும் பெருமையை எக்ஸ்போ லங்கா தன்னகத்தே கொண்டுள்ளதுடன், ஆசியாவில் இந்த சான்றை பெற்ற முதலாவது கம்பனி எனும் பெருமையையும் தன்னகத்தே கொண்டுள்ளது. சமூக பொறுப்புணர்வு திட்டங்களை பொறுத்தமட்டில், எக்ஸ்போமெடிக்ஸ் - குறைந்த செலவில் மருத்துவ சிகிச்சை கிளினிக், இலவச சுகாதார முகாம்கள் மற்றும் சுகாதாரம் மற்றும் நோய்கள் குறித்த விழிப்புணர்வு திட்டங்கள், பட்டப்படிப்பு புலமைப் பரிசில் திட்டங்கள், அனர்த்த விடுவிப்பு, கட்டமைப்பு அபிவிருத்தி, உணவு திட்டங்கள் மற்றும் உலக நீர்தினம், புவி மணித்தியாலம் மற்றும் சுற்றுச் சூழல்தின நிகழ்வுகள் உள்ளடங்கிய சூழல் செயற்பாடுகள் போன்றவை முன்னெடுக்கப்படுகிறன. அனைத்து சமூக பொறுப்புணர்வு திட்டங்களும் ஐந்து பிரிவுகளை நோக்காக கொண்டமைந்துள்ளன. சுகாதாரம், கல்வி, சூழல், சமூக அபிவிருத்தி மற்றும் அனர்த்த விடுவிப்பு போன்றன இதில் உள்ளடங்குகின்றன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .