
வட்டியில்லா வங்கித்துறையில் முற்றும் முழுதாக செயற்பட்டுவரும் இலங்கையின் ஒரேயொரு அங்கீகரிக்கப்பட்ட வர்த்தக வங்கியான அமானா வங்கி 2011ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் செயற்படத் தொடங்கியதிலிருந்து இதுவரை வர்த்தக வளர்ச்சியிலும், சந்தை நடவடிக்கைகளிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கண்டுள்ளது.
இரண்டு வருடகால வர்த்தகச் செயற்பாட்டின் மூலம் வாடிக்கையாளர் நிதிவசதிகளில் 188 சதவீத வளர்ச்சியையும், வாடிக்கையாளர் பண வைப்புக்களில் 70 சதவீத வளர்ச்சியையும் பதிவுசெய்த அதேவேளை 2013ஆம் ஆண்டில் அதன் வளர்ச்சிவேகம் மேலும் அதிகரித்துள்ளது.
இதன்படி, வாடிக்கையாளர் நிதிவசதிகள் 280 கோடியாலும், வாடிக்கையாளர் பண வைப்புக்கள் 260 கோடியாலும் வளர்ச்சி கண்டுள்ளது.
வங்கியின் தனித்துவமான வங்கிச் சேவைமுறை, முன்னேற்றங்கள் மற்றும் வர்த்தக வளர்ச்சியை சந்தையின் அங்கீகாரம் பிரதிபலிக்கின்றது. கடந்தவருடம் அனைத்து வங்கிகள் மீதும் விதிக்கப்பட்ட மத்திய வங்கியின் கடன் உச்ச வரம்பின் தாக்கம் உணரப்பட்டபோதிலும், அமானா வங்கி அதன் உத்வேகத்தை மீண்டும் பெற்று வாடிக்கையாளர் நிதிவசதிகளில் இந்தவருடம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. ஏற்கனவே தமது வங்கிச் சேவைமுறையை ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் ஏற்றுக் கொண்டிருப்பதாகவும், இந்த எண்ணிக்கை ஒவ்வொரு மாதமும் துரிதமாக வளர்ச்சி கண்டு வருகின்றது என்றும் அமானா வங்கி குறிப்பிட்டுள்ளது.
வர்த்தக மூலோபாய ரீதியில் 24 இடங்களில் தனது கிளைகளை வியாபித்துள்ள இந்த வங்கி, நாடுபூராகவும் உள்ள 500 இற்கும் மேற்பட்ட ஏ.டீ.எம் (ATM) இயந்திரங்கள் ஊடாக கொடுக்கல் வாங்கலை மேற்கொள்வதற்கு வசதியளித்துள்ளது. தனது கிளை வியாபித்தலுக்கும் அப்பால், அமானா வங்கி தமது வாடிக்கையாளர்களுக்கு சௌகரியமான வகையில் பல முன்னெடுப்புக்களை மேற்கொண்டுள்ளது.
சனிக்கிழமை வங்கிச் சேவை, நீடிக்கப்பட்டுள்ள வங்கி அலுவல் நேரம், 24 மணித்தியாலமும் பணத்தையும் காசோலையையும் வைப்புச் செய்வதற்கான தன்னியக்க இயந்திர (Kiosk) வசதி என்பன இந்த முன்னெடுப்புக்களில் சிலவாகும். தமது வாடிக்கையாளர்களின் கொடுப்பனவுத் தேவைகளை சௌகரியமாக்குவதற்காக அமானா வங்கி வெகுவிரைவில் தனது பற்று அட்டையை (Debit card) அறிமுகப்படுத்தவுள்ளது.
சமூகத்தின் நலனைக் கருத்திற்கொண்டு ஒழுக்க நெறிமுறைகள், சமத்துவம் மற்றும் நியாயத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு நிதிச் சேவையை வழங்க அமானா வங்கி உடன்பட்டுள்ளது. தனது மூலோபாய வர்த்தகப் பங்காளிகளான பேங்க் இஸ்லாம் மலேஷியா, சவுதி அரேபியாவைச் சேர்ந்த இஸ்லாமிய அபிவிருத்தி வங்கி, பங்களதேசின் ஏ.பீ வங்கி ஆகியவற்றின் ஆதரவாலும், தனது ஸ்திரத்தன்மையாலும் வலிமையடைந்துள்ள அமானா வங்கி இலங்கை வங்கியியல் துறையில் ஒரு புரட்சிகர பயணத்தை மேற்கொண்டுள்ளதோடு, நாடு முழுவதும் இந்த தனித்துவமான வங்கியியல் துறையை வளர்க்கும் வாய்ப்புக்களுக்கு நிதியளிப்பதிலும் கவனம் செலுத்திவருகின்றது.